2 நாளாகமம் 31
31
31 அதிகாரம்
1இவையெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீனெங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலுங்கூட உண்டான சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிக்குத் திரும்பினார்கள்.
2எசேக்கியா ஆசாரியர் லேவியருடைய வகுப்புகளை அவர்கள் வரிசைகளின்படியேயும், அவரவரை அவர்கள் ஊழியத்தின்படியேயும் திட்டப்படுத்தி, ஆசாரியரையும் லேவியரையும், சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தவும், கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ்செய்து துதித்து ஸ்தோத்திரிக்கவும் ஒழுங்குபடுத்தினான்.
3ராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே அந்திசந்திகளில் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் ஆஸ்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான்.
4ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.
5இந்த வார்த்தை பிரசித்தமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரத்திலும் முதற்பலன்களைத் திரளாகக் கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாய்க் கொடுத்தார்கள்.
6யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள்.
7மூன்றாம் மாதத்தில் குவியல் செய்யத்தொடங்கி ஏழாம் மாதத்தில் முடித்தார்கள்.
8எசேக்கியாவும் பிரபுக்களும் வந்து, அந்தக் குவியல்களைக் காணும்போது, கர்த்தருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலைப் புகழ்ந்தார்கள்.
9அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா ஆசாரியரையும் லேவியரையும் விசாரித்தபோது,
10சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தோம்; இன்னும் மிச்சமும் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்.
11அப்பொழுது எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்தில் பண்டகசாலைகளை ஆயத்தப்படுத்தச் சொன்னான்.
12அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளையும் உண்மையாய் எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாயிருந்தான்.
13ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே, யெகியேலும், அசசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
14கிழக்குவாசலைக் காக்கிற இம்னாவின் குமாரனாகிய கோரே என்னும் லேவியன், கர்த்தருக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் மகா பரிசுத்தமானவைகளையும் பங்கிடும்படிக்கு, தேவனுக்குச் செலுத்தும் உற்சாகக் காணிக்கைகள்மேல் அதிகாரியாயிருந்தான்.
15அவனுடைய கைக்கு உதவியாக ஆசாரியரின் பட்டணங்களில் வகுப்புகளின்படியிருக்கிற தங்கள் சகோதரரிலே பெரியவனுக்கும் சிறியவனுக்கும் சரிசமானமாய்க் கொடுக்கும்படிக்கு, உண்மையுள்ளவர்களாக எண்ணப்பட்ட ஏதேனும், மின்யமீனும், யெசுவாவும், செமாயாவும், அமரியாவும், செக்கனியாவும் ஏற்படுத்தப்பட்டார்கள்.
16வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத்தவிர, கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் வகுப்புகளின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாய் அநுதின படி கொடுக்கப்பட்டது.
17தங்கள் பிதாக்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் வகுப்புகளின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியருக்கும், லேவியருக்கும்,
18அவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், குமாரருக்கும், குமாரத்திகளுக்கும் பங்கு கொடுத்தார்கள்; அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாய் விசாரித்தார்கள்.
19ஆசாரியரில் எல்லா ஆண்பிள்ளைகளுக்கும் லேவியருக்குள்ளே அட்டவணையில் எழுதப்பட்டவர்கள் எல்லாருக்கும் படிகொடுக்க, ஆசாரியருடைய ஒவ்வொரு பட்டணத்துக்கடுத்த வெளிநிலங்களிலும் ஆரோன் புத்திரரில் பேர்பேராகக் குறிக்கப்பட்ட மனுஷர் இருந்தார்கள்.
20இந்தப் பிரகாரமாக எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்.
21அவன் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலும், தன் தேவனைத் தேடும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்திலும் என்ன செய்யத் தொடங்கினானோ, அதையெல்லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து சித்திபெற்றான்.
Currently Selected:
2 நாளாகமம் 31: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.