YouVersion Logo
Search Icon

2 நாளாகமம் 3

3
3 அதிகாரம்
1பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத் துவங்கினான்.
2அவன் தான் ராஜ்யபாரம்பண்ணின நாலாம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.
3தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.
4முகப்பு மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபது முழ நீளமும், நூற்றிருபது முழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் மூடினான்.
5ஆலயத்தின் பெரிய மாளிகையை தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் இழைத்து, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்தரித்து,
6அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.
7அந்த மாளிகையின் உத்திரங்களையும், நிலைகளையும், அதின் சுவர்களையும், அதின் கதவுகளையும் பொன்தகட்டால் மூடி, கொத்துவேலையால் சுவர்களிலே கேருபீன்களைச் செய்வித்தான்.
8மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபது முழமுமாயிருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் இழைத்தான்.
9ஆணிகளின் நிறை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் இழைத்தான்.
10அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாய் உண்டுபண்ணினான்; அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.
11அந்த கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்து முழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்து முழமாயிருந்து, மற்ற கேருபீனின் செட்டையைத் தொட்டது.
12மற்ற கேருபீனின் ஒரு செட்டையும் ஐந்து முழமாயிருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மறுசெட்டையும் ஐந்து முழமாயிருந்து, மற்ற கேருபீனின் செட்டையைத் தொட்டது.
13இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.
14இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவுப்புநூலாலும் மெல்லியநூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டுபண்ணினான்.
15ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின் மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,
16சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் பண்ணி, தூண்களின் முனைகளின் மேல் பற்றவைத்து, நூறு மாதளம் பழங்களையும் பண்ணி அந்தச் சங்கிலிகளில் கோர்த்தான்.
17அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடது புறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in