2 நாளாகமம் 2
2
2 அதிகாரம்
1சாலொமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தன் ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்ட நிர்ணயம்பண்ணி,
2சுமைசுமக்கிறதற்கு எழுபதினாயிரம்பேரையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதினாயிரம் பேரையும், இவர்கள்மேல் தலைவராக மூவாயிரத்து அறுநூறுபேரையும் எண்ணி ஏற்படுத்தினான்.
3தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்தில் ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் வாசமாயிருக்கும் அரமனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்குத் தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவு செய்யும்.
4இதோ, என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம் காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வு நாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்திய காலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்கதகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைபண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன்.
5எங்கள் தேவன் எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர்; ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும்.
6வானங்களும், வானாதிவானங்களும், அவரைக் கொள்ளக்கூடாதிருக்க அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கே ஒழிய, வேறே முகாந்தரமாய் அவருக்கு ஆலயம் கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்?
7இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், இரத்தாம்பரநூலிலும், சிவப்பு நூலிலும், இளநீல நூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்.
8லீபனோனிலிருந்து கேதுருமரங்களையும் தேவதாரி விருட்சங்களையும் வாசனை மரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர் பழகினவர்களென்று அறிவேன்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூட இருப்பார்கள்.
9நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும்.
10அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரருக்கு இருபதினாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதினாயிரம் குடம் திராட்சரசத்தையும், இருபதினாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்.
11அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்.
12 கர்த்தருக்கு ஒரு ஆலயத்தையும், தமது ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்டத்தக்க யுக்தியும் புத்தியுமுடைய ஞானமுள்ள குமாரனை, தாவீது ராஜாவுக்குக் கட்டளையிட்டவராகிய வானத்தையும் பூமியையும் உண்டாக்கின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
13இப்போதும் ஈராம் அபியென்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்,
14அவன் தாணின் குமாரத்திகளில் ஒரு ஸ்திரீயின் குமாரன்; அவன் தகப்பன் தீருதேசத்தான்; அவன் பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும, இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பர நூலிலும், இளநீலநூலிலும் மெல்லிய நூலிலும், சிவப்பு நூலிலும் வேலை செய்யவும், சகலவிதக் கொத்துவேலை செய்யவும், என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ, அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணரோடும், உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணரோடுங்கூட யூகித்துச் செய்யவும் அறிந்தவன்.
15என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் தம்முடைய ஊழியக்காரருக்கு அனுப்புவாராக.
16நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாய்க் கட்டி கடல் வழியாய் யோப்பாமட்டும் கொண்டுவருவோம்; பிற்பாடு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்,.
17தன் தகப்பனாகிய தாவீது இஸ்ரவேல் தேசத்திலுண்டான மறுஜாதியாரையெல்லாம் எண்ணித் தொகையிட்டதுபோல, சாலொமோனும் அவர்களை எண்ணினான்; அவர்கள் லட்சத்துஐம்பத்து மூவாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.
18இவர்களில் அவன் எழுபதினாயிரம்பேரைச் சுமைசுமக்கவும், எண்பதினாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறுபேரை ஜனத்தின் வேலையை விசாரிக்கும் தலைவராயிருக்கவும் வைத்தான்.
Currently Selected:
2 நாளாகமம் 2: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.