1 சாமுவேல் 20:35-42
1 சாமுவேல் 20:35-42 TAOVBSI
மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்த நேரத்திலே ஒரு சிறுபிள்ளையாண்டானைக் கூட்டிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்: பிள்ளையாண்டானை நோக்கி: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி, அந்தப் பிள்ளையாண்டான் ஓடும்போது, அவனுக்கு அப்பாலே போகும்படி ஒரு அம்பை எய்தான். யோனத்தான் எய்த அம்பிருக்கும் இடமட்டும் பிள்ளையாண்டான் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான். நீ தரித்து நிற்காமல் தீவிரித்துப் பொட்டெனப்போ என்றும் யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் பிள்ளையாண்டான் அம்புகளைப் பொறுக்கி, தன் எஜமானிடத்தில் கொண்டு வந்தான். அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்தப் பிள்ளையாண்டானுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது. அப்பொழுது யோனத்தான்: தன் ஆயுதங்களைப் பிள்ளையாண்டானிடத்தில் கொடுத்து, இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான். பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்து வந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்று விசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான். அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான்.