1 இராஜாக்கள் 19:14-21
1 இராஜாக்கள் 19:14-21 TAOVBSI
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு, சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான். ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார். அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான். அப்பொழுது அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவு கொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான். அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்.