1 கொரிந்தியர் 7:1-19
1 கொரிந்தியர் 7:1-19 TAOVBSI
நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது. ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும். புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள். இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், யோசனையாகச் சொல்லுகிறேன். எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது. விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும். ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம். விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப்பிரிந்து போகக்கூடாது. பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது. மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன். அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள். என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன. ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன். ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனமில்லாதவனாயிருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக. விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.