YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1

1
இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படல்
1தெயோப்பிலுவே, நான் முன்பு எழுதிய புத்தகத்தில், இயேசு ஆரம்பத்திலிருந்து அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்ததும்#1:1 செய்ததும் – கிரேக்க மொழியில் செய்ய ஆரம்பித்ததும் என்றுள்ளது., போதித்ததுமான அனைத்தையும்பற்றி எழுதினேன். 2தாம் தெரிவுசெய்த அப்போஸ்தலர்களுக்கு பரிசுத்த ஆவியானவராலே அந்நாள்வரை அறிவுறுத்தல்களைக் கொடுத்த பின்பு, அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். 3அவர் வேதனை அனுபவித்து மரணித்த பின்பு, தம்மை அவர்களுக்கு காண்பித்து, தாம் உயிருடன் இருப்பதை அநேக ஆதாரங்களுடன் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்தார். அவர் நாற்பது நாட்கள் அவர்களுக்கு காட்சியளித்து, இறைவனுடைய அரசைக் குறித்துப் பேசினார். 4அவர்களுடன் இருந்தபோது#1:4 இருந்தபோது – உணவருந்திக் கொண்டிருக்கையில் என்றும் மொழிபெயர்க்கலாம், அவர்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: “நீங்கள் எருசலேமைவிட்டு வெளியேறாதீர்கள், பிதாவின் வாக்குறுதியைக் குறித்து நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களே, அதற்காகக் காத்திருங்கள்; 5ஏனெனில் யோவான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்தார், ஆனால் நீங்களோ இன்னும் சில நாட்களில் பரிசுத்த ஆவியானவரினால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்.”
6எனவே, சீடர்கள் இயேசுவோடு ஒன்றுகூடியபோது அவரிடம், “ஆண்டவரே, நீர் இஸ்ரயேலருக்குரிய பேரரசை மீண்டும் தரப்போகும் காலம் இதுவா?” என்று கேட்டார்கள்.
7அதற்கு இயேசு அவர்களிடம்: “பிதா தமது அதிகாரத்தினால் நியமித்திருக்கின்ற நேரங்களையும், காலங்களையும் அறிகின்றது உங்களுக்குரியது அல்ல. 8மாறாக பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது வரும்போது, நீங்கள் வல்லமை பெற்று எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், அத்துடன் பூமியின் கடைசி எல்லை வரையிலும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.
9இயேசு இதைச் சொன்ன பின்பு, அவர்களுடைய கண்களுக்கு முன்பாகவே, அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். ஒரு மேகம் அவரை அவர்களுடைய பார்வையிலிருந்து மறைத்துக் கொண்டது.
10இயேசு கடந்து சென்றுகொண்டிருக்கையில், அவர்கள் தொடர்ந்தும் வானத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அப்போது வெள்ளை உடை அணிந்த இருவர் திடீரென அவர்கள் அருகே வந்து நின்று, 11“கலிலேயரே#1:11 கலிலேயரே – கிரேக்க மொழியில் கலிலேயா மனிதரே என்றுள்ளது., நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக்கொண்டு இங்கே நிற்கிறீர்கள்? உங்களிடம் இருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவராகிய இயேசு திரும்பவும் உங்களிடம் வருவார். பரலோகத்திற்கு எவ்விதமாக போகின்றார் என்பதைக் காண்கின்றீர்களே. அவ்விதமாகவே அவர் திரும்பவும் வருவார்” என்றார்கள்.
மத்தியா சீடனாக தெரிவு செய்யப்படல்
12பின்பு சீடர்கள், ஒலிவமலை எனப்பட்ட அந்தக் குன்றிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள். பட்டணத்திலிருந்து ஓய்வுநாளில் நடக்கக்கூடிய தூரத்தில் ஒலிவமலை இருந்தது. 13அவர்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது, அவர்கள் தங்கியிருந்த வீட்டிலுள்ள மேல் அறைக்குப் போனார்கள்.
அங்கே பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா;
பிலிப்பு, தோமா,
பர்த்தொலொமேயு, மத்தேயு;
அல்பேயுவின் மகன் யாக்கோபு, யூதவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் வந்திருந்தார்கள்.
14அவர்கள் எல்லோரும் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து மன்றாடிக்#1:14 மன்றாடி – அர்ப்பணிப்புடன் என்றும் மொழிபெயர்க்கலாம் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பெண்களும், இயேசுவின் தாய் மரியாளும், இயேசுவின் சகோதரரும் இருந்தார்கள்.
15இவ்வாறு கூடிய ஒரு நாளில், விசுவாசிகளின் நடுவே பேதுரு எழுந்து நின்றான். அங்கு ஏறக்குறைய நூற்றிருபது பேர் கூடியிருந்தனர். 16அவன் அவர்களிடம், “சகோதரரே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த யூதாசைக் குறித்து, பரிசுத்த ஆவியானவர் வெகு காலத்திற்கு முன்பு, தாவீதின் மூலமாய் பேசினார். அந்த வேதவசனம் நிறைவேற வேண்டியதாய் இருந்தது. 17அவன் நம்மில் ஒருவனாய் கணிக்கப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்கு பெற்றிருந்தான்.”
18அவன் தனது கொடிய செயலுக்கு வெகுமதியாகப் பெற்ற பணத்தைக்கொண்டு, ஒரு வயல் வாங்கப்பட்டது; அவன் அங்கே தலைகீழாக விழுந்தான். அவனது வயிறு வெடித்து, குடல்கள் எல்லாம் வெளியே சிதறின. 19எருசலேமிலுள்ள ஒவ்வொருவரும், இதைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள், அந்த வயல் நிலத்தைத் தங்கள் மொழியில் அக்கெல்தமா என்று சொல்கின்றார்கள். அக்கெல்தமா என்றால், இரத்த நிலம் என்று அர்த்தமாகும்.
20மேலும் பேதுரு சொன்னதாவது, “சங்கீதப் புத்தகத்தில் இதைக் குறித்து எழுதப்பட்டுள்ளது:
“ ‘அவனுடைய இருப்பிடம் கைவிடப்பட்டுப் போவதாக;
அதில் ஒருவரும் குடியிருக்காதிருப்பார்களாக.’#1:20 சங். 69:25
அத்துடன்,
“ ‘அவனுடைய தலைமைத்துவ பணியை வேறொருவன் பொறுப்பெடுக்கட்டும்.’#1:20 சங். 109:8
21எனவே ஆண்டவர் இயேசு, நமது மத்தியில் இருந்த காலம் முழுவதும், நம்முடனே இருந்தவர்களுள் ஒருவனைத் தெரிந்தெடுப்பது அவசியமாகும். 22யோவான் ஞானஸ்நானம் கொடுத்த காலத்தின் தொடக்கத்திலிருந்து, இயேசு நம்மிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலம் வரைக்கும், அவன் நம்முடனே இணைந்து பயணித்திருக்க வேண்டும். அவனும் நம்மைப் போலவே இயேசு உயிருடன் எழுந்ததற்கு சாட்சியாக இனிமேல் செயற்பட வேண்டும்” என்றான்.
23எனவே அவர்கள் யுஸ்து என்னும் பர்சபா எனப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இருவரை முன்மொழிந்தார்கள். 24பின்பு அவர்கள் மன்றாடி, “கர்த்தாவே, நீர் எல்லோருடைய இருதயத்தையும் அறிந்திருக்கிறீர், இந்த இருவரில் நீர் யாரைத் தெரிவு செய்தீர் என்பதை எங்களுக்குக் காண்பியும். 25யூதாஸ் தனக்குரிய இடத்திற்கு போவதற்காக கைவிட்டுப் போன இந்த அப்போஸ்தல ஊழியத்தைச் செய்வதற்கு, நீர் தெரிவு செய்தவனை எங்களுக்குக் காண்பியும்” என்றார்கள். 26அதன்பின்பு, அவர்கள் சீட்டுப் போட்டார்கள். சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது. எனவே, அவன் மற்ற பதினொரு அப்போஸ்தலர்களுடனும் சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in