YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2

2
1எனது அடுத்த சந்திப்பு உங்களைத் துயரப்படுத்தக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். 2நான் உங்களைத் துயரப்படுத்தினால், பின்னர் யார் என்னை மகிழ்ச்சிப்படுத்துவர்? நான் துயரப்படுத்திய நீங்கள்தானே என்னை மகிழ்ச்சிப்படுத்த முடியும்? 3இந்தக் காரணத்துக்காகத்தான் உங்களுக்குக் கடிதம் எழுதினேன். அதனால் உங்களை சந்திக்கும்போது, என்னை மகிழ்ச்சிப்படுத்தப்போகும் உங்களைத் துயரப்படுத்தமாட்டேன். எனது மகிழ்ச்சியை நீங்கள் அனைவரும் பகிர்ந்துகொள்வீர்கள் என்று உறுதியாக எண்ணுகிறேன். 4நான் இதற்கு முன்பு உங்களுக்கு எழுதும்போது மனதில் தொல்லைகளையும், துயரங்களையும் கொண்டிருந்தேன். நான் என் கண்ணீராலேயே எழுதினேன். உங்களைத் துயரப்படுத்த வேண்டுமென்று அதை எழுதவில்லை. உங்கள் மீதுள்ள என் அளவற்ற அன்பை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென அவ்வாறு எழுதினேன்.
தவறு செய்தவனை மன்னியுங்கள்
5உங்கள் கூட்டத்திலுள்ள ஒருவனே துயரத்துக்குக் காரணமாக இருந்தான். எனக்கு மட்டுமல்ல, உங்கள் அனைவரின் துயரத்துக்கும் அவனே காரணமாக இருந்தான். அதாவது, ஏதாவது ஒரு வழியில் (நான் மிகைப்படுத்த விரும்பவில்லை) எல்லாருக்கும் துயரமுண்டாக அவன் காரணமாக இருந்தான். 6உங்களில் பலர் அவனுக்குத் தந்த தண்டனையே போதுமானது. 7ஆனால் இப்பொழுது அவனை மன்னித்து ஆதரவு அளிக்க வேண்டும். அது அவனை அதிக துயரத்தில் ஆழ்ந்து போகாதபடி காக்கும். 8நீங்கள் அவனை நேசிக்கிறீர்கள் என்பதை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதனால்தான் நான் உங்களுக்கு எழுதினேன். 9நீங்கள் எல்லாவற்றிலும் பணிவுடன் இருக்கிறீர்களா என்று சோதித்து அறியவே எழுதினேன். 10நீங்கள் யாரையாவது மன்னித்தால் அவர்களை நானும் மன்னித்துவிடுகிறேன். நான் மன்னிப்பவை அனைத்தும் (மன்னிக்கப்பட ஏதேனும் இருக்கும் பட்சத்தில்) உங்கள் பொருட்டே ஆகும். கிறிஸ்து எங்களோடு இருக்கிறார். 11சாத்தான் என்னிடமிருந்த எதையும் வெல்ல முடியாதவகையில் இதைச் செய்தேன். சாத்தானின் சதிதிட்டங்களையும் நாம் நன்றாக அறிவோம்.
துரோவாவில் பவுலின் பணி
12கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்புவதற்காக நான் துரோவாவிற்குப் போனேன். கர்த்தர் அங்கு எனக்கு நல்ல வாய்ப்பினைத் தந்தார். 13அங்கே எனது சகோதரன் தீத்துவைப் பார்க்காததால் நான் அமைதியற்று இருந்தேன். எனவே நான் அங்குள்ளவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு மக்கதோனியாவிற்குப் போனேன்.
14தேவனுக்கு நன்றி. தேவன் எப்பொழுதும் எங்களைக் கிறிஸ்துவின் மூலம் வெற்றி பெறும்படி வழி நடத்துகிறார். இனிய மணமுள்ள வாசனைப் பொருளைப் போன்று எல்லா இடங்களிலும் தேவன் தனது அறிவைப் பரப்ப நம்மைப் பயன்படுத்துகிறார். 15இரட்சிக்கப்படுகிறவர்களுக்கிடையிலும் கெட்டுப்போவோரிடையேயும் நாங்கள் கிறிஸ்துவின் நறுமணமாக இருக்கிறோம். இதுவே நாங்கள் தேவனுக்குத் தரும் காணிக்கை. 16கெட்டுப்போவோரிடையே இறப்புக்கு ஏதுவான மரணத்தின் வாசனையாக இருக்கிறோம். இட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே வாழ்க்கைக்கு ஏதுவான ஜீவ வாசனையாக இருக்கிறோம். இவைகளை செயல்படுத்தத் தகுதியானவன் யார்? 17மற்றவர்களைப் போன்று, நாங்கள் தேவனுடைய வார்த்தையை இலாபத்துக்காக விற்பதில்லை. ஆனால் தேவனுக்கு முன்னால் கிறிஸ்துவுக்குள் உண்மையையே பேசுகிறோம். தேவனால் அனுப்பப்பட்டவர்களைப் போல் நாங்கள் பேசுகிறோம்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in