YouVersion Logo
Search Icon

சகரி 4

4
அத்தியாயம் 4
குத்துவிளக்கும் ஒலிவமரங்களும்
1என்னுடன் பேசின தூதன் திரும்பி வந்து தூங்குகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி: 2நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது. 3அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன். 4நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். 5என்னுடன் பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். 6அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற யெகோவாவுடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 7பெரிய மலையே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார். 8பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 9செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் யெகோவா என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய். 10அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைசெய்யலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய யெகோவாவுடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலை சந்தோஷமாகப் பார்க்கிறது என்றார். 11பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்கிற்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன். 12மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாகத் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கச்செய்கிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன். 13அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். 14அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்திற்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.

Currently Selected:

சகரி 4: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in