YouVersion Logo
Search Icon

நீதி 21

21
அத்தியாயம் 21
யெகோவாவின் ஆளுகை
1ராஜாவின் இருதயம் யெகோவாவின் கையில் நீரூற்றைப்போல இருக்கிறது;
அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.
2மனிதனுடைய வழியெல்லாம் அவனுடைய பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்;
யெகோவாவோ இருதயங்களை நிறுத்திப்பார்க்கிறார்.
3பலியிடுவதைவிட, நீதியும் நியாயமும் செய்வதே யெகோவாவுக்குப் பிரியம்.
4மேட்டிமையான பார்வையும்,
அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர்கள் போடும் வெளிச்சம் பாவமே. 5ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்திற்கும்,
பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்திற்கும் ஏதுவாகும்.
6பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது
சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போல இருக்கும்.
7துன்மார்க்கர்கள் நியாயம்செய்ய மனமில்லாமல் இருக்கிறபடியால்,
அவர்கள் அழிக்கப்பட்டுபோவார்கள்.
8குற்றமுள்ளவன் தன்னுடைய வழிகளில் மாறுபாடுள்ளவன்;
சுத்தமுள்ளவனோ தன்னுடைய செயலில் செம்மையானவன்.
9சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட,
வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
10துன்மார்க்கனுடைய மனம் தீங்கைச் செய்ய விரும்பும்;
அவனுடைய கண்களில் அவனுடைய அயலானுக்கு இரக்கம் கிடையாது.
11பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்;
ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.
12நீதிபரர் துன்மார்க்கர்களுடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்;
துன்மார்க்கர்களைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.
13ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன்,
தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
14இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்;
மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும்.
15நியாயம்தீர்ப்பது நீதிமானுக்கு சந்தோஷமும்,
அக்கிரமக்காரர்களுக்கோ அழிவுமாகும்.
16விவேகத்தின் வழியைவிட்டுத் தப்பி நடக்கிற மனிதன் செத்தவர்களின் கூட்டத்தில் தங்குவான்.
17சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்;
மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை.
18நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும்,
செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.
19சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட
வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.
20வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு;
மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.
21நீதியையும் தயவையும் பின்பற்றுகிறவன்
நல்வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.
22பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து,
அவர்கள் நம்பின மதில்சுவரை இடித்துப்போடுவான்.
23தன்னுடைய வாயையும் தன்னுடைய நாவையும் காக்கிறவன்
தன்னுடைய ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
24அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர்,
அவன் அகந்தையான கோபத்தோடு நடக்கிறான்.
25சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால்,
அவனுடைய ஆசை அவனைக் கொல்லும்.
26அவன் நாள்தோறும் ஆவலுடன் விரும்புகிறான்;
நீதிமானோ தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கொடுப்பான்.
27துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது;
அதைத் தீயசிந்தையோடு செலுத்தினாலோ எத்தனை அதிகமாக அருவருக்கப்படும்.
28பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்;
செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசக்கூடியவனாவான்.
29துன்மார்க்கன் தன்னுடைய முகத்தைக் கடினப்படுத்துகிறான்;
செம்மையானவனோ தன்னுடைய வழியை நேர்ப்படுத்துகிறான்.
30யெகோவாவுக்கு விரோதமான
ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை.
31குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்;
வெற்றியோ யெகோவாவால் வரும்.

Currently Selected:

நீதி 21: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in