YouVersion Logo
Search Icon

எண் 6

6
அத்தியாயம் 6
நசரேயன்
1யெகோவா மோசேயை நோக்கி: 2“நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: “ஆணோ பெண்ணோ யெகோவாக்கென்று விரதம் செய்து கொண்டவர்களாக இருக்கும்படி நசரேய விரதமாகிய#6:2 தேவனுடைய பணிக்காக வேறு பிரிக்கப்பட்டவன் ஒரு விசேஷித்த பொருத்தனையை செய்தால், 3அப்படிப்பட்டவன் திராட்சைரசத்தையும் மதுபானத்தையும் விலக்கவேண்டும்; அவன் திராட்சைரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சைரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடிக்காமலும், திராட்சைப்பழங்களையோ திராட்சைவற்றல்களையோ சாப்பிடாமலும், 4தான் நசரேயனாக இருக்கும் நாளெல்லாம் திராட்சைச்செடி விதைமுதல் தோல்வரை உள்ளவைகளினால் செய்யப்பட்ட எதையும் சாப்பிடாமலும் இருக்கவேண்டும். 5“அவன் நசரேய விரதமிருக்கும் நாட்களெல்லாம் சவரகன் கத்தி அவனுடைய தலையின்மேல் படக்கூடாது; அவன் யெகோவாக்கென்று விரதமிருக்கும் காலம் நிறைவேறும்வரை பரிசுத்தமாக இருந்து, தன்னுடைய தலைமுடியை வளரவிடவேண்டும். 6அவன் யெகோவாவுக்கென்று விரதமிருக்கும் நாட்களெல்லாம் யாதொரு பிரேதத்தின் அருகில் போகக்கூடாது. 7அவன் தன்முடைய தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவனுடைய தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன்னுடைய தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலோ சகோதரியினாலோ தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாது. 8அவன் நசரேயனாக இருக்கும் நாட்களெல்லாம் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருப்பான். 9“அவனருகில் ஒருவன் திடீரென மரணமடைந்ததால், நசரேய விரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதென்றால், அவன் தன்னுடைய சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன்னுடைய தலைமுடியைச் சிரைத்துக்கொண்டு, 10எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையோ இரண்டு புறாக்குஞ்சுகளையோ ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடம் கொண்டுவரவேண்டும். 11அப்பொழுது ஆசாரியன் ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, பிணத்தினால் அவனுக்கு உண்டான தீட்டை நிவிர்த்திசெய்து, அவனுடைய தலையை அந்தநாளில் பரிசுத்தப்படுத்தவேண்டும். 12அவன் திரும்பவும் தன்னுடைய விரதநாட்களைக் யேகோவாக்கென்று காத்து, ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரவேண்டும்; அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதால் சென்ற நாட்கள் வீணாகும். 13“நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதமிருக்கும் நாட்கள் நிறைவேறின அன்றைக்கே, அவன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே வந்து, 14சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், பாவநிவாரணபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும், 15ஒரு கூடையில் எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் யெகோவாவுக்குத் தன்னுடைய காணிக்கையாகச் செலுத்தவேண்டும். 16அவைகளை ஆசாரியன் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரணபலியையும் அவனுடைய சர்வாங்கதகனபலியையும் செலுத்தி, 17ஆட்டுக்கடாவைக் கூடையில் இருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் யெகோவாவுக்குச் சமாதான பலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைக்கவேண்டும். 18அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன்னுடைய தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன்னுடைய தலைமுடியை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடவேண்டும். 19நசரேயன் பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமுடியைச் சிரைத்துக்கொண்டபின்பு, ஆசாரியன் ஆட்டுக்கடாவினுடைய வேகவைக்கப்பட்ட ஒரு முன்னந்தொடையையும், கூடையில் இருக்கிறவைகளிலே புளிப்பில்லாத ஒரு அதிரசத்தையும் புளிப்பில்லாத ஒரு அடையையும் எடுத்து, அவனுடைய உள்ளங்கைகளில் வைத்து, 20அவைகளைக் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்; அது அசைவாட்டப்பட்ட மார்புப்பகுதியோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும், ஆசாரியனைச் சேரும்; அது பரிசுத்தமானது. பின்பு நசரேயன் திராட்சைரசம் குடிக்கலாம். 21“பொருத்தனைசெய்த நசரேயனுக்கும், அவன் தன்னுடைய கைக்கு உதவுகிறதைத்தவிர, தன் நசரேய விரதத்திற்காக யெகோவாவுக்குச் செலுத்தும் காணிக்கையின் பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன்னுடைய பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்றபடி செய்து முடிக்கவேண்டும் என்று சொல் என்றார். 22பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 23“நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:
24“யெகோவா உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காப்பார்.
25“யெகோவா தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கச்செய்து,
உன்மேல் கிருபையாக இருபாராக.
26“யெகோவா தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடுவார்,
என்பதே. 27“இந்த விதமாக அவர்கள் என்னுடைய நாமத்தை இஸ்ரவேல் மக்கள்மேல் கூறவேண்டும்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்” என்றார்.

Currently Selected:

எண் 6: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in