YouVersion Logo
Search Icon

நெகே 9

9
அத்தியாயம் 9
இஸ்ரவேலர்கள் தங்கள் பாவங்களை அறிக்கைசெய்தல்
1அந்த மாதம் இருபத்துநான்காம் தேதியிலே இஸ்ரவேல் மக்கள் உபவாசம்செய்து, சணல் ஆடை உடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாகக் கூடிவந்தார்கள். 2இஸ்ரவேல் சந்ததியார்கள் யூதரல்லாதவர்களை எல்லாம் விட்டுப்பிரிந்து வந்து நின்று, தங்களுடைய பாவங்களையும், தங்கள் முன்னோர்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள். 3அவர்கள் எழுந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது அந்நாளின் காற்பகுதிவரை அவர்களுடைய தேவனாகிய யெகோவாவின் நியாயப்பிரமாணப் புத்தகம் வாசிக்கப்பட்டது; அடுத்த காற்பகுதிவரை அவர்கள் பாவஅறிக்கைசெய்து, தங்கள் தேவனாகிய யெகோவாவை குனிந்து வணங்கினார்கள். 4யெசுவா, பானி, கத்மியேல், செபனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி என்பவர்கள் லேவியர்களுடைய படிகளின்மேல் நின்று, தங்கள் தேவனாகிய யெகோவாவை நோக்கி மகா சத்தமாக அலறினார்கள். 5பின்பு லேவியர்களான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் மக்களைப் பார்த்து: நீங்கள் எழுந்து, என்றும் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, யெகோவாவை நோக்கி: எல்லா துதி ஸ்தோத்திரத்திற்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்திற்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. 6நீர் ஒருவரே யெகோவா; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மை பணிந்துகொள்ளுகிறது. 7ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயர்களின் பட்டணத்திலிருந்து புறப்படச்செய்து, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பெயரிட்ட தேவனாகிய யெகோவா நீர். 8அவனுடைய இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், எபூசியர்கள், கிர்காசியகளுடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்க, அவனோடு உடன்படிக்கைசெய்து. உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர்; நீர் நீதியுள்ளவர். 9எகிப்திலே எங்கள் முற்பிதாக்கள் அநுபவித்த உபத்திரவத்தை நீர் கண்டு, செங்கடலில் அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டீர். 10பார்வோனிடமும், அவனுடைய எல்லா ஊழியக்காரர்களிடமும், அவன் தேசத்தின் எல்லா மக்களிடத்திலும், அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தீர்; அவர்கள் உமது மக்களை கர்வத்துடன் நடத்தினார்கள் என்பதை அறிந்திருந்தீர்; இப்படியே இந்த நாள்வரைக்கும் இருக்கிற உமக்கு புகழை உண்டாக்கினீர். 11நீர் அவர்களுக்கு முன்பாக சமுத்திரத்தைப் பிரித்ததால், அதன் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; ஆழமான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர். 12நீர் பகலிலே மேகமண்டலத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினி மண்டலத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர். 13நீர் சீனாய்மலையில் இறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர். 14உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது ஊழியனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் கற்றுக்கொடுத்தீர். 15அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்திற்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்து, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர். 16எங்கள் முன்னோர்களாகிய அவர்களோ ஆணவமாக நடந்து, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி,#9:16 தங்கள் இருதயத்தை கடினப்படுத்தினார்கள் உம்முடைய கற்பனைகளைக் கேட்காமல் போனார்கள். 17அவர்கள் கற்பனைகளைக் கேட்க மனமில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினைக்காமலும் போய், தங்களுடைய கழுத்தைக் கடினப்படுத்தி, தங்களுடைய அடிமைத்தனத்திற்குத் திரும்ப அவர்கள் கலகம்செய்து, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் முழுவதும் மன்னிக்கிறவரும், இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை. 18அவர்கள் உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு கன்றுக்குட்டியைத் தங்களுக்கு உண்டாக்கி: இது உன்னை எகிப்திலிருந்து கொண்டுவந்த உன்னுடைய தெய்வம் என்று சொல்லி, கோபமடையத்தக்க பெரிய அக்கிரமங்களைச் செய்திருந்தாலும், 19நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தாலே, அவர்களை வனாந்திரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகமண்டலத்தாலும் அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிமண்டலத்தாலும் அவர்களை விட்டு விலகவில்லை. 20அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டீர்; அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை தந்து, அவர்கள் தாகத்திற்குத் தண்ணீரைக் கொடுத்தீர். 21இப்படி நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவில்லாமல், அவர்களைப் பராமரித்துவந்தீர்; அவர்களுடைய உடைகள் பழமையாகப் போகவுமில்லை, அவர்களுடைய கால்கள் வீங்கவுமில்லை. 22அவர்களுக்கு ராஜ்ஜியங்களையும் மக்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் சுதந்தரித்துக்கொண்டார்கள். 23அவர்களுடைய பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகச்செய்து, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் முன்னோர்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்துவந்தீர். 24அப்படியே பிள்ளைகள் உள்ளே நுழைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டார்கள்; நீர் அவர்களுக்கு முன்பாக தேசத்தின் மக்களாகிய கானானியர்களைத் தாழ்த்தி, அவர்களையும் அவர்களுடைய ராஜாக்களையும், தேசத்தின் மக்களையும், தாங்கள் விரும்பியதை செய்ய, அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தீர். 25அவர்கள் பாதுகாப்பான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, எல்லாவித உடைமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட கிணறுகளையும், ஏராளமான திராட்சைத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் மரங்களையும் சுதந்தரித்துக்கொண்டு, சாப்பிட்டுத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயவினால் செல்வச்செழிப்பாக வாழ்ந்தார்கள். 26ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி, உமக்கு விரோதமாகக் கலகம்செய்து, உம்முடைய நியாயப்பிரமாணத்தைத் தங்களுக்குப் பின்னே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களை மிகவும் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமடையச்செய்கிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள். 27ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்களுடைய எதிரிகளின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர்; அவர்கள் உபத்திரவம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்களுடைய எதிரிகளின் கையிலிருந்து விடுவிக்கிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர். 28அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் தீமை செய்யத் துவங்கினார்கள்; ஆகையால் அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஆள, அவர்களுடைய கையிலே ஒப்புவித்தீர்; அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர். 29அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்திற்குத் திருப்ப அவர்களைத் அதிகமாகக் கடிந்துகொண்டீர்; ஆனாலும் அவர்கள் ஆணவம்கொண்டு, உம்முடைய கற்பனைகளைக் கேட்காமல், கீழ்ப்படிந்து நடக்கிற மனிதன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரட்டுத்தனமாக விலக்கி, கற்பனைகளைக் கேட்காமல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள். 30நீர் அநேக வருடங்களாக அவர்கள்மேல் பொறுமையாக இருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை கடினமாக கடிந்துகொண்டாலும், அவர்கள் கேட்காமல்போனதாலே அவர்களை அந்நிய தேசத்துமக்களின் கையில் ஒப்புக்கொடுத்தீர். 31ஆகிலும் உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே, அவர்களை நிர்மூலமாக்காமலும் அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர்; நீர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன். 32இப்பொழுதும் உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற வல்லமையும் பயங்கரமுமுள்ள மகா தேவனாகிய எங்கள் தேவனே, அசீரியா ராஜாக்களின் நாட்கள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் எங்களுக்கும், எங்களுடைய ராஜாக்களுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், முன்னோர்களுக்கும், உம்முடைய மக்கள் அனைவருக்கும் சம்பவித்த எல்லா வருத்தமும் உமக்கு முன்பாக சிறியதாக காணப்படாதிருப்பதாக. 33எங்களுக்கு சம்பவிக்கச்செய்த எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடத்தினீர்; நாங்களோ துன்மார்க்கம் செய்தோம். 34எங்களுடைய ராஜாக்களும், பிரபுக்களும், ஆசாரியர்களும், முன்னோர்களும், உம்முடைய நியாயப்பிரமாணத்தின் முறையில் செய்யாமலும், உம்முடைய கற்பனைகளையும், நீர் அவர்களைக் கடிந்துகொண்ட உம்முடைய சாட்சிகளையும் கவனியாமலும் போனார்கள். 35அவர்கள் தங்கள் ராஜ்ஜியத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயவிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் தீயசெயல்களைவிட்டுத் திரும்பாமலும் போனார்கள். 36இதோ, இன்றையதினம் நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம். இதோ, பலனையும் நன்மையையும் அனுபவிக்க நீர் எங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த இந்த தேசத்தில்தானே நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம். 37அதின் வருமானம் எங்கள் பாவங்களினாலே நீர் எங்கள்மேல் நியமித்த ராஜாக்களுக்கு அதிகமாக போகிறது; அவர்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் எங்களுடைய சரீரங்களையும் மிருக ஜீவன்களையும் ஆளுகிறார்கள்; நாங்கள் கொடிய இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம். 38இவையெல்லாம் இப்படி இருக்கிறதால், நாங்கள் உறுதியான உடன்படிக்கைசெய்து அதை எழுதி வைக்கிறோம்; எங்களுடைய பிரபுக்களும், லேவியர்களும், ஆசாரியர்களும் அதற்கு முத்திரை போடுவார்கள் என்றார்கள்.

Currently Selected:

நெகே 9: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy