YouVersion Logo
Search Icon

மாற் 2

2
அத்தியாயம் 2
பக்கவாதக்காரனை சுகப்படுத்துதல்
1சில நாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டில் இருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டு; 2உடனே அநேக மக்கள் கூடிவந்தார்கள், வாசலுக்குமுன்பு நிற்க இடம் இல்லாமல்போனது; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார். 3அப்பொழுது நான்குபேர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்தார்கள்; 4மக்கள்கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் செல்லமுடியாமல், அவர் இருந்த வீட்டின் மேல்கூரையைப் பிரித்து, அந்தப் பக்கவாதக்காரனை படுக்கையோடு இறக்கினார்கள். 5இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். 6அங்கே உட்கார்ந்திருந்த வேதபண்டிதர்களில் சிலர்: 7இவன் இப்படித் தேவநிந்தனை சொல்லுகிறது என்ன? தேவன் ஒருவரைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று தங்களுடைய இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். 8அவர்கள் தங்களுடைய மனதில் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறது என்ன? 9உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, அல்லது எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொல்வதோ, எது எளிது? 10பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: 11நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 12உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக தன் வீட்டிற்குப்போனான். அப்பொழுது எல்லோரும் ஆச்சரியப்பட்டு: நாம் இதுவரை இப்படிப்பட்ட சம்பவத்தைப் பார்த்தது இல்லை என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
மத்தேயு ஊழியத்திற்கு அழைக்கப்படுதல்
13அவர் மீண்டும் புறப்பட்டுக் கடல் அருகே போனார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் அவரிடம் வந்தார்கள்; அவர்களுக்குப் போதனைப்பண்ணினார். 14அப்பொழுது அவர் நடந்துபோகும்போது, அல்பேயுவின் குமாரனாகிய லேவி வரிவசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து: என் பின்னே வாஎன்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்னேசென்றான். 15அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் விருந்து சாப்பிடும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவரோடு வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள். 16இயேசு வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறதை வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் பார்த்து, அவருடைய சீடர்களை நோக்கி: அவர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுவது ஏன் என்று கேட்டார்கள். 17இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவை, சுகமாக இருப்பவர்களுக்கு தேவை இல்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனம்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
உபவாசத்தைக்குறித்த கேள்வி
18யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து: யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணுகிறார்களே, ஆனால் உம்முடைய சீடர்கள் உபவாசம்பண்ணாமல் இருப்பது ஏன் என்று கேட்டார்கள். 19அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் உபவாசம்பண்ணுவார்களா? மணவாளன் தங்களோடு இருக்கும்வரை உபவாசம்பண்ணமாட்டார்களே. 20மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள். 21ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு இணைத்து தைக்கமாட்டான், தைத்தால், அதினோடு இணைத்த புதிய ஆடை பழைய ஆடையை அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும். 22ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால், புதிய இரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும் என்றார்.
ஓய்வுநாளின் ஆண்டவர்
23பின்பு, அவர் ஓய்வுநாளில் வயல்வழியாக நடந்துபோனார்; அவருடைய சீடர்கள் அவரோடு நடந்துபோகும்போது, கதிர்களைச் சாப்பிட தொடங்கினார்கள். 24பரிசேயர்கள் அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள். 25அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது, 26அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் படித்தது இல்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் சாப்பிடக்கூடாத தேவ சமுகத்தின் அப்பங்களைத் தானும் சாப்பிட்டுத் தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார். 27பின்பு அவர்களை நோக்கி: மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது; 28எனவே மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.

Currently Selected:

மாற் 2: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in