YouVersion Logo
Search Icon

லேவி 6

6
அத்தியாயம் 6
1பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 2“ஒருவன் யெகோவாவுக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானை ஏமாற்றி, அல்லது ஒரு பொருளை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடையூறுசெய்து, 3அல்லது காணாமற்போனதைக் கண்டுபிடித்து அதை மறுதலித்து, அதைக்குறித்துப் பொய்யாக சத்தியம் செய்து, மனிதர்கள் செய்யும் இதைப்போல யாதொரு காரியத்தில் பாவம்செய்தான் என்றால், 4அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானதால், தான் வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டதையும், இடையூறுசெய்து பெற்றுக்கொண்டதையும், தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும், 5பொய்யாக சத்தியம் செய்து சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவும் சேர்த்து, அதைத் தான் குற்றநிவாரணபலியை செலுத்தும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு, 6தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்பீட்டுக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் யெகோவாவுக்குச் செலுத்த, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக. 7யெகோவாவுடைய சந்நிதியில் அவனுடைய பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்வானாக; அப்பொழுது, அவனைக் குற்றவாளியாக்கிய அப்படிப்பட்ட எந்தக்காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்.
சர்வாங்க தகனபலிக்குரிய விதிமுறைகள்
8பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 9“நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய விதிமுறைகள் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இரவுமுதல் விடியற்காலம்வரை பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பு எரிந்துகொண்டே இருக்கவேண்டும். 10ஆசாரியன் சணல்நூல் உள்ளாடையை தன் இடுப்பில் போட்டுக்கொண்டு, சணல்நூல் அங்கியை அணிந்து, பலிபீடத்தின்மேல் நெருப்பில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்தின் அருகில் கொட்டி, 11பின்பு தன் உடைகளைக் கழற்றி, வேறு உடைகளை அணிந்துகொண்டு, அந்தச் சாம்பலை முகாமிற்கு வெளியே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன். 12பலிபீடத்தின்மேலிருக்கிற நெருப்பு அணையாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதானபலிகளின் கொழுப்பைப் போட்டு எரிக்கக்கடவன். 13பலிபீடத்தின்மேல் நெருப்பு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபோதும் அணைந்துபோகக்கூடாது.
உணவுபலிக்குரிய விதிமுறைகள்
14“உணவுபலியின் விதிமுறைகள் என்னவென்றால், ஆரோனின் மகன்கள் அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் பலிபீடத்திற்கு முன்னே படைக்கவேண்டும். 15அவன், உணவுபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, உணவுபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை நன்றியின் அடையாளமாகப் பலிபீடத்தின்மேல் யெகோவாவுக்கு நறுமண வாசனையாக எரிக்கக்கடவன். 16அதில் மீதியானதை ஆரோனும் அவனுடைய மகன்களும் சாப்பிடுவார்களாக; அதை புளிப்பில்லாத அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடவேண்டும்; ஆசரிப்புக்கூடாரத்தின் பிராகாரத்தில் அதைச் சாப்பிடவேண்டும். 17அதைப் புளித்தமாவுள்ளதாக வேகவைக்கவேண்டாம்; அது எனக்கு செலுத்தப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலவும் குற்றநிவாரணபலியைப் போலவும் மகா பரிசுத்தமானது. 18ஆரோனின் சந்ததியில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; யெகோவாவுக்கு செலுத்தப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாக இருப்பான்” என்று சொல் என்றார். 19பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 20“ஆரோன் அபிஷேகம் செய்யப்படும் நாளில், அவனும் அவனுடைய மகன்களும் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நிரந்தரமான உணவுபலியாகச் செலுத்தக்கடவர்கள். 21அது பாத்திரத்திலே எண்ணெய்விட்டு வேகவைக்கவேண்டும்; வேகவைத்தபின்பு அதைக் கொண்டுவந்து, உணவுபலியாக யெகோவாவுக்கு நறுமண வாசனையாகப் படைக்கக்கடவாய். 22அவனுடைய மகன்களில் அவனுடைய இடத்திலே அபிஷேகம்செய்யப்படுகிற ஆசாரியனும் அப்படியே செய்யக்கடவன்; அது முழுவதும் எரிக்கப்படவேண்டும்; அது யெகோவா ஏற்படுத்தின நிரந்தரமான கட்டளை. 23ஆசாரியனுக்காக செலுத்தப்படும் எந்த உணவுபலியும் சாப்பிடாமல், முழுவதும் எரிக்கப்படவேண்டும்” என்றார்.
பாவநிவாரணபலிக்குரிய விதிமுறைகள்
24பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 25“நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் விதிமுறைகள் என்னவென்றால், சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் யெகோவாவுடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது. 26பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைச் சாப்பிடுவானாக; ஆசரிப்புக்கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது சாப்பிடப்படவேண்டும். 27அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாக இருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு உடையில் தெறித்ததென்றால், இரத்தம்தெறித்த உடையைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும். 28அது சமைக்கப்பட்ட மண்பானை உடைக்கப்படவேண்டும்; செப்புப்பானையில் சமைக்கப்பட்டால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும். 29ஆசாரியர்களில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; அது மகா பரிசுத்தமானது. 30எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்திக்காக ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலியைச் சாப்பிடக்கூடாது, அது நெருப்பிலே எரிக்கப்படவேண்டும்.

Currently Selected:

லேவி 6: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in