YouVersion Logo
Search Icon

யோவா 6

6
அத்தியாயம் 6
ஐந்தாயிரம்பேரைப் போஷித்தல்
1இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். 2அவர் வியாதியாக இருந்தவர்களுக்கு செய்த அற்புதங்களைத் திரளான மக்கள் பார்த்தபடியால் அவருக்குப் பின் சென்றார்கள். 3இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீடர்களோடுகூட உட்கார்ந்தார். 4அப்பொழுது யூதர்களுடைய பண்டிகையாகிய பஸ்கா நெருங்கியிருந்தது. 5இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, அநேக மக்கள் தம்மிடத்தில் வருகிறதைப் பார்த்து, பிலிப்புவினிடம்: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே வாங்கலாம் என்று கேட்டார். 6தாம் செய்ய போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். 7பிலிப்பு அவருக்கு மறுமொழியாக: இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம், எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்திற்கு வாங்கும் அப்பங்களும் இவர்களுக்குப் போதுமானதாக இருக்காதே என்றான். 8அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரைப் பார்த்து: 9இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான், அவனுடைய கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கின்றது, ஆனாலும் அவைகள் இவ்வளவு மக்களுக்கு எப்படிப் போதும் என்றான். 10இயேசு: மக்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாக இருந்தது. பந்தியிருந்த ஆண்கள் ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் இருந்தார்கள். 11இயேசு அந்த அப்பங்களை எடுத்து, நன்றிசெலுத்தி, சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் பந்தி இருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்குத் தேவையானஅளவு கொடுத்தார். 12அவர்கள் திருப்தியடைந்தப்பின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒன்றும் வீணாகப் போகாதபடிக்கு மீதியான துண்டுகளைச் சேர்த்துவையுங்கள் என்றார். 13அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள். 14இயேசு செய்த அற்புதத்தை அந்த மனிதர்கள் பார்த்து: உண்மையாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள். 15ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாக இருக்கிறார்கள் என்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
இயேசு தண்ணீரின்மேல் நடத்தல்
16மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய், 17படகில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராக போனார்கள்; அப்பொழுது இருட்டாக இருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார். 18பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது. 19அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் படகில் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படகின் அருகில் வருகிறதைப் பார்த்து பயந்தார்கள். 20அவர்களை அவர் பார்த்து: நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார். 21அப்பொழுது அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விருப்பமானார்கள்; உடனே படகு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது. 22மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற மக்கள் அவருடைய சீடர்கள் ஏறின அந்த ஒரே படகைத்தவிர அங்கே வேறொரு படகும் இருந்ததில்லை என்றும், இயேசு தம்முடைய சீடர்களோடுகூடப் படகில் ஏறாமல் அவருடைய சீடர்கள்மட்டும் போனார்கள் என்றும் அறிந்தார்கள். 23கர்த்தர், நன்றி செலுத்தினபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து வேறு படகுகள் வந்தது. 24அப்பொழுது இயேசுவும் அவருடைய சீடர்களும் அங்கே இல்லாததை மக்கள் பார்த்து, உடனே அந்தப் படகுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள்.
ஜீவ அப்பமாகிய இயேசு
25கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைப் பார்த்தபோது: ரபீ, நீர் எப்பொழுது இந்த இடத்திற்கு வந்தீர் என்று கேட்டார்கள். 26இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் அற்புதங்களைப் பார்த்ததினால் அல்ல, நீங்கள் அப்பங்கள் புசித்துத் திருப்தியானதினால் தான் என்னைத் தேடுகிறீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 27அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். 28அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: தேவனுக்குரிய செயல்களை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். 29இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்குரிய செயல்களாக இருக்கிறது என்றார். 30அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படி நாங்கள் பார்க்கதக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்ன காரியத்தை நடப்பிக்கிறீர்? 31வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தை சாப்பிடக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய முற்பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைச் சாப்பிட்டார்களே என்றார்கள். 32இயேசு அவர்களைப் பார்த்து: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 33வானத்தில் இருந்து இறங்கி. உலகத்திற்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே, தேவன் தரும் அப்பம் என்றார். 34அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார்கள். 35இயேசு அவர்களைப் பார்த்து: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருபோதும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் ஒருபோதும், தாகமடையான். 36நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். 37பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறதெல்லாம் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் வெளியே தள்ளுவதில்லை. 38என் விருப்பத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படி செய்யவே, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன். 39அவர் எனக்குக் கொடுத்ததில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் விருப்பமாக இருக்கிறது. 40குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். 41நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து: 42இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும், தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படி இருக்க, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள். 43இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுக்குள் முறுமுறுக்க வேண்டாம். 44என்னை அனுப்பின பிதா, ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். 45எல்லோரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே; ஆகவே, பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். 46தேவனிடத்தில் இருந்து வந்தவரேதவிர வேறு ஒருவரும் பிதாவைப் பார்த்ததில்லை, இவரே பிதாவைப் பார்த்தவர். 47என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 48ஜீவ அப்பம் நானே. 49உங்களுடைய பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைச் சாப்பிட்டிருந்தும் மரித்தார்கள். 50இதிலே சாப்பிடுகிறவன் மரிக்காமலும் இருக்கும்படி வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே. 51நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். 52அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய சரீரத்தை எப்படி நமக்கு சாப்பிடக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்தார்கள். 53அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனுடைய சரீரத்தைச் சாப்பிடாமலும், அவருடைய இரத்தத்தைக் குடிக்காமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 54என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். 55என் சரீரம் உண்மையான உணவாக இருக்கிறது, என் இரத்தம் உண்மையான பானமாக இருக்கிறது. 56என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். 57ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். 58வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். 59கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கும்போது இவைகளைச் சொன்னார்.
இயேசுவின் சீடர்கள் இடறலடைதல்
60அவருடைய சீடர்களில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்கள். 61சீடர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களைப் பார்த்து: இது உங்களுக்கு இடறலாக இருக்கிறதோ? 62மனிதகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் பார்ப்பீர்களானால் எப்படி இருக்கும்? 63ஆவியே உயிர்ப்பிக்கிறது, சரீரமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாகவும், ஜீவனாகவும் இருக்கிறது. 64ஆனாலும் உங்களில் விசுவாசிக்காதவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றார்; விசுவாசிக்காதவர்கள் இவர்கள் என்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இவன்தான் என்றும் ஆரம்பமுதல் இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: 65ஒருவன் என் பிதாவின் அனுமதி பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதற்காகவே உங்களுக்குச் சொன்னேன் என்றார். 66அதுமுதல் அவருடைய சீடர்களில் அநேகர் அவருடனேகூட நடக்காமல் பின்வாங்கிப்போனார்கள். 67அப்பொழுது இயேசு பன்னிரண்டுபேரையும் பார்த்து: நீங்களும் போய்விட விருப்பமாக இருக்கிறீர்களோ என்றார். 68சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. 69நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். 70இயேசு அவர்களைப் பார்த்து: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாக இருக்கிறான் என்றார். 71சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரில் ஒருவனாக இருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாக இருந்தபடியினால் அவனைக்குறித்து இப்படிச் சொன்னார்.

Currently Selected:

யோவா 6: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy