YouVersion Logo
Search Icon

ஏசா 1

1
அத்தியாயம் 1
1ஆமோத்சின் மகனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் ஆட்சியின் காலங்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி.
கலகக்கார தேசம்
2வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; யெகோவா பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாகக் கலகம்செய்தார்கள். 3மாடு தன் எஜமானையும், கழுதை, தான் உணவு உண்ணும் இடத்தையும் அறியும்; இஸ்ரவேலர்களோ அறிவில்லாமலும், என் மக்கள் உணர்வில்லாமலும் இருக்கிறார்கள் என்கிறார். 4ஐயோ, பாவமுள்ள தேசமும், அக்கிரமத்தால் பாரம்சுமந்த மக்களும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற மக்களுமாக இருக்கிறார்கள்; யெகோவாவைவிட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள். 5இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமதிகமாக விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பெலவீனமாக இருக்கிறது. 6உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், பிளந்திருக்கிற காயமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. 7உங்களுடைய தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக அழிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழான தேசம்போல் இருக்கிறது. 8மகளாகிய சீயோன், திராட்சைத்தோட்டத்திலுள்ள ஒரு குடிசையைப்போலவும், வெள்ளரித் தோட்டத்திலுள்ள ஒரு குடிசையைப்போலவும், முற்றுகை போடப்பட்ட ஒரு நகரத்தைப்போலவும் மீந்திருக்கிறாள். 9சேனைகளின் யெகோவா நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம். 10சோதோமின் அதிபதிகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் மக்களே, நமது தேவனுடைய வேதத்திற்குச் செவிகொடுங்கள். 11உங்களுடைய மிகுதியான பலிகள் எனக்கு எதற்கு என்று யெகோவா சொல்கிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் கொழுப்பும் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை. 12நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? 13இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்துடன் அனுசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிப் பொறுத்துக்கொள்ளமாட்டேன். 14உங்கள் மாதப்பிறப்புகளையும், பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து சோர்ந்துபோனேன். 15நீங்கள் உங்கள் கைகளை விரித்து ஜெபித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் அதிகமாக ஜெபம்செய்தாலும் கேட்கமாட்டேன்; உங்கள் கைகள் குற்றமற்றவர்களின் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. 16உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் செயல்களின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்வதைவிட்டு ஓயுங்கள்; 17நன்மைசெய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். 18வழக்காடுவோம் வாருங்கள் என்று யெகோவா சொல்கிறார்; உங்கள் பாவங்கள் அதிகச் சிவப்பாக இருந்தாலும் உறைந்த பனியைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். 19நீங்கள் மனப்பூர்வமாகச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைச் சாப்பிடுவீர்கள். 20மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களானால் பட்டயத்திற்கு இரையாவீர்கள்; யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று. 21உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போனது! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிமக்கள் கொலைபாதகர்கள். 22உன் வெள்ளி களிம்பானது; உன் திராட்சைரசம் தண்ணீர்க்கலப்பானது. 23உன் பிரபுக்கள் முரடர்களாகவும், திருடர்களின் நண்பர்களுமாக இருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் லஞ்சத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரிப்பதில்லை; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை. 24ஆகையால் சேனைகளின் யெகோவாவும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்கிறதாவது; ஓகோ, நான் என் எதிரிகளில் கோபம் தணிந்து, என் பகைவர்களை பழிவாங்குவேன். 25நான் என் கையை உன் பக்கமாகத் திருப்பி, உன் கலப்படம் நீங்க உன்னைச் சுத்தமாகப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன். 26உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரர்களை முதலில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய். 27சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பிவருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள். 28துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாக நொறுங்குண்டுபோவார்கள்; யெகோவாவை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள். 29நீங்கள் விரும்பி தெரிந்துக்கொண்ட கர்வாலிமரங்களுடைய தோப்புகளுக்காக வெட்கப்படுவீர்கள்; #1:29 மரங்களையும் தோப்புகளையும் வணங்கி வந்தார்கள் 30இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப் போலவும், தண்ணீரில்லாத தோப்பைப்போலவும் இருப்பீர்கள். 31பராக்கிரமசாலி சணல்குவியலும், அவன் செயல் அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அணைப்பாரில்லாமல் அனைத்தும் வெந்துபோகும் என்று சொல்கிறார்.

Currently Selected:

ஏசா 1: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy