YouVersion Logo
Search Icon

எபி 13

13
அத்தியாயம் 13
இறுதி ஜெபமும் வாழ்த்துக்களும்
1சகோதர அன்பு நிலைத்திருக்கட்டும். 2அந்நியர்களை உபசரிக்க மறக்காதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு. 3சிறைச்சாலையில் இருக்கிறவர்களோடு நீங்களும் சிறைச்சாலையிலே இருக்கிறவர்களைப்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; அவர்களுடைய சரீரங்களைப்போல உங்களுடைய சரீரங்களும் தீங்கு அனுபவித்ததாக நினைத்து, தீங்கு அனுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். 4திருமணம் எல்லோருக்குள்ளும் கனமுள்ளதாகவும், பரிசுத்தமாகவும் இருப்பதாக; வேசிக்கள்ளர்களையும் விபசாரக்காரர்களையும் தேவன் நியாயந்தீர்ப்பார். 5நீங்கள் பணஆசை இல்லாதவர்களாக நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகளே போதும் என்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. 6அதினாலே நாம் தைரியத்தோடு: கர்த்தர் எனக்கு உதவிசெய்கிறவர், நான் பயப்படமாட்டேன், மனிதன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே. 7தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாகச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். 8இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். 9பலவிதமான அந்நிய போதனைகளால் அலைந்து திரியாமல் இருங்கள். உணவுபொருட்களால் இல்லை, கிருபையினாலே இருதயம் உறுதிப்படுத்தப்படுகிறது நல்லது; உணவுபொருட்களால் பயனில்லையே. 10நமக்கு ஒரு பலிபீடம் உண்டு, அங்குள்ளவைகளைச் சாப்பிடுகிறதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரம் இல்லை. 11ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களுக்காகப் பரிசுத்த இடத்திற்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் முகாமிற்கு வெளியே சுட்டெரிக்கப்படும். 12அப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே மக்களைப் பரிசுத்தம் பண்ணுவதற்காக நகர வாசலுக்கு வெளியே பாடுகள்பட்டார். 13ஆகவே, நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, முகாமிற்கு வெளியே அவரிடம் புறப்பட்டுப் போவோம். 14நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே விரும்பித்தேடுகிறோம். 15ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம். 16அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறக்காமல் இருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாக இருக்கிறார். 17உங்களை நடத்துகிறவர்கள், உங்களுடைய ஆத்துமாக்களுக்காக உத்திரவாதம் பண்ணுகிறவர்களாக விழித்திருக்கிறதினால், அவர்கள் துக்கத்தோடு இல்லை, சந்தோஷத்தோடு அதைச் செய்வதற்காக, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கி இருங்கள்; அவர்கள் துக்கத்தோடு அதைச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்காது. 18எங்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்; நாங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக எல்லாவற்றிலும் யோக்கியமாக நடக்க விரும்புகிறோம் என்று உறுதியாக நம்புகிறோம். 19நான் மிகவும் சீக்கிரமாக உங்களிடம் வருவதற்கு நீங்கள் தேவனை வேண்டிக்கொள்ளும்படி உங்களை அதிகமாகக் கேட்டுக்கொள்ளுகிறேன். 20நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், 21இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். 22சகோதரர்களே, நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாக ஏற்றுக்கொள்ள உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். 23சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டான் என்று தெரிந்துகொள்ளுங்கள்; அவன் சீக்கிரமாக வந்தால், நான் அவனோடுகூட வந்து, உங்களைப் பார்ப்பேன். 24உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் எல்லோரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 25கிருபையானது உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

Currently Selected:

எபி 13: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy