ஆதி 49
49
அத்தியாயம் 49
யாக்கோபு தன் மகன்களை ஆசீர்வதித்தல்
1யாக்கோபு தன் மகன்களை அழைத்து: “நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்குச் சம்பவிக்கும் காரியங்களை அறிவிப்பேன். 2யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்”. 3“ரூபனே, நீ என் முதற்பிறந்தவன்; நீ என் திறமையும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். 4தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய படுக்கையின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே. 5சிமியோனும், லேவியும் சகோதரர்கள்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். 6என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு மனிதனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை அழித்தார்களே. 7அவர்களுடைய கடுமையான கோபமும், கொடுமையான மூர்க்கமும் சபிக்கப்படுவதாக; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் செய்வேன். 8யூதாவே, சகோதரர்களால் புகழப்படுபவன் நீயே; உன் கை உன் எதிரிகளுடைய கழுத்தின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய மகன்கள் உன்னைப் பணிவார்கள். 9யூதா பெரிய சிங்கம்,#49:9 பெண்சிங்கம் நீ இரையை விரும்பி ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப்படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? 10சமாதானக் யெகோவா வரும்வரைக்கும்#49:10 அவர் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, ஆளுகை அவனுடைய பாதங்களைவிட்டு ஒழிவதும் இல்லை; மக்கள் அவரிடத்தில் சேருவார்கள். 11அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சைச்செடியிலும், தன் பெண்கழுதையின் குட்டியை உயர்தர திராட்சைச்செடியிலும் கட்டுவான்; திராட்சை ரசத்திலே தன் ஆடையையும், திராட்சைப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் வெளுப்பான். 12அவனுடைய கண்கள் திராட்சைரசத்தினால் சிவப்பாகவும், அவனுடைய பற்கள் பாலினால் வெண்மையாகவும் இருக்கும். 13செபுலோன் கடற்கரை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாக இருப்பான்; அவனுடைய எல்லை சீதோன்வரைக்கும் இருக்கும். 14இசக்கார் இரண்டு சுமைகளின்#49:14 ஆடு மாடு கூட்டங்கள் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை. 15அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, கூலிவேலை செய்கிறவனானான். 16தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான். 17தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாக அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற பாம்பைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான். 18யெகோவாவே, உம்மாலே விடுவிக்கப்படக் காத்திருக்கிறேன். 19காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான். 20ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிகரமானவைகளை அவன் தருவான். 21நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான். 22யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீரூற்றின் அருகில் உள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும். 23வில்வீரர்கள் அவனை மனவருத்தமாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள். 24ஆனாலும், அவனுடைய வில் உறுதியாக நின்றது; அவனுடைய புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கைகளால் பலமடைந்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான். 25உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், மார்பகங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார். 26உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுவரைக்கும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய தலையின் மேலும், தன் சகோதரர்களில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக. 27பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையை அழிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்” என்றான். 28இவர்கள் எல்லோரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்.
யாக்கோபு மரணமடைதல்
29பின்னும் அவன் அவர்களை நோக்கி: “நான் என் ஜனத்தாரோடு சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களருகில் அடக்கம் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டு; 30அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா எனப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாக இருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனான எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். 31அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்செய்தார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்செய்தார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்செய்தேன். 32அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான். 33யாக்கோபு தன் மகன்களுக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு உயிர்போய், தன் மக்களோடு சேர்க்கப்பட்டான்.
Currently Selected:
ஆதி 49: IRVTam
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.