YouVersion Logo
Search Icon

ஆதி 18

18
அத்தியாயம் 18
மூன்று விருந்தினர்கள்
1பின்பு யெகோவா மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குக் காட்சியளித்தார். அவன் பகலின் வெயில் நேரத்தில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, 2தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று மனிதர்கள் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைவரைக்கும் குனிந்து: 3“ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தால், நீர் உமது அடியேனைவிட்டுப் போகவேண்டாம். 4கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறேன், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருங்கள். 5நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; பிறகு நீங்கள் உங்கள் வழியிலே போகலாம்; இதற்காகவே அடியேனுடைய இடம்வரைக்கும் வந்தீர்கள்” என்றான். அதற்கு அவர்கள்: “நீ சொன்னபடி செய்” என்றார்கள். 6அப்பொழுது ஆபிரகாம் விரைவாகக் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: “நீ சீக்கிரமாக மூன்றுபடி#18:6 மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு” என்றான். 7ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான். 8ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைக்கப்பட்ட கன்றையும் எடுத்து வந்து, அவர்களுக்கு முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் சாப்பிட்டார்கள். 9அவர்கள் அவனை நோக்கி: “உன் மனைவி சாராள் எங்கே” என்றார்கள். அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். 10அப்பொழுது அவர்#18:10 யேகோவா: “ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் நிச்சயமாக உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாகக் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 11ஆபிரகாமும் சாராளும் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள்; பெண்களுக்குரிய மாதவழிபாடு சாராளுக்கு நின்றுபோனது. 12ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே சிரித்து: “நான் கிழவியும், என்னுடைய கணவன் முதிர்ந்த வயதுள்ளவருமாக இருக்கும்போது, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ” என்றாள். 13அப்பொழுது யெகோவா ஆபிரகாமை நோக்கி: “சாராள், நான் கிழவியாக இருக்கும்போது குழந்தைபெற்றெடுப்பது சாத்தியமோ என்று சொல்வதென்ன? 14யெகோவாவால் ஆகாத காரியம் உண்டோ? கர்ப்பகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார். 15சாராள் பயந்து, நான் சிரிக்கவில்லை” என்று மறுத்தாள். அதற்கு அவர்: “இல்லை, நீ சிரித்தாய்” என்றார்.
ஆபிரகாம் சோதோமுக்காக விண்ணப்பம் செய்தல்
16பின்பு அந்த மனிதர்கள் எழுந்து அந்த இடத்தைவிட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடு போய் வழியனுப்பினான். 17அப்பொழுது யெகோவா: “ஆபிரகாம் பெரிய பலத்த தேசமாவதாலும், அவனுக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படுவதாலும், 18நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? 19யெகோவா ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றுவதற்காக அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, யெகோவாவுடைய வழியைக் கைக்கொண்டு நடக்கவேண்டுமென்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்” என்றார். 20பின்பு யெகோவா “சோதோம் கொமோராவைக்குறித்து ஏற்படும் கூக்குரல் பெரிதாக இருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடியதாக இருப்பதினாலும், 21நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன்” என்றார். 22அப்பொழுது அந்த மனிதர்கள் அந்த இடத்தைவிட்டு சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் யெகோவாவுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். 23அப்பொழுது ஆபிரகாம் அருகில் வந்து: “துன்மார்க்கனோடு நீதிமானையும் அழிப்பீரோ? 24பட்டணத்திற்குள் ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அங்கேயிருக்கும் அந்த ஐம்பது நீதிமான்களுக்காகக் காப்பாற்றாமல் அந்த இடத்தை அழிப்பீரோ? 25துன்மார்க்கனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதல்ல; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாக நடத்துவது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாமல் இருப்பாரோ” என்றான். 26அதற்குக் யெகோவா: “நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்களுக்காக அந்த இடம் முழுவதையும் காப்பாற்றுவேன்” என்றார். 27அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக: “இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடு பேசத்துணிந்தேன். 28“ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேருக்காக பட்டணம் முழுவதையும் அழிப்பீரோ” என்றான். அதற்கு அவர்: “நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை” என்றார். 29அவன் பின்னும் அவரோடு பேசி: “நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “நாற்பது நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை” என்றார். 30அப்பொழுது அவன்: “நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை” என்றார். 31அப்பொழுது அவன்: “இதோ, ஆண்டவரோடு பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “இருபது நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை” என்றார். 32அப்பொழுது அவன்: “ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருமுறை மட்டும் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: “பத்து நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை” என்றார். 33யெகோவா ஆபிரகாமோடு பேசி முடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான்.

Currently Selected:

ஆதி 18: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in