YouVersion Logo
Search Icon

எஸ்றா 5

5
அத்தியாயம் 5
தத்னாய் என்பவன் தரியு ராஜாவுக்குக் கடிதம் எழுதுதல்
1அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் மகனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேலுடைய தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 2அப்பொழுது செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும் யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்கு தைரியம் சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள். 3அக்காலத்திலே நதிக்கு இந்தப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் கூட்டாளிகள் அவர்களிடத்திற்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள். 4அப்பொழுது அதற்கு ஏற்ற பதிலையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதர்களின் பெயர்களையும் அவர்களுக்குச் சொன்னோம். 5ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடைசெய்யாதபடி, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.
6நதிக்கு இந்தப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னும் தேசாதிபதியும், சேத்தார் பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான அவனுடன் இருந்தவர்களும், ராஜாவாகிய தரியுவிற்கு எழுதியனுப்பின கடிதத்தின் நகலாவது: 7ராஜாவாகிய தரியுவிற்கு முழு சமாதானமும் உண்டாவதாக. 8நாங்கள் யூத நாட்டிலுள்ள மகா தேவனுடைய ஆலயத்திற்குப் போனோம்; அது பெருங்கற்களால் கட்டப்படுகிறது; மதில்களின்மேல் நீண்ட மரங்கள் வைக்கப்பட்டு, அந்த வேலை ஒழுங்காக நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரிந்திருப்பதாக. 9அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம். 10இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவர்களான மனிதர்கள் யார் என்று உமக்கு எழுதி தெரியப்படுத்த, அவர்களுடைய பெயர்கள் என்னவென்றும் கேட்டோம். 11அவர்கள் எங்களுக்கு மறுமொழியாக: நாங்கள் பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் தேவனாக இருக்கிறவரைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருடங்களுக்குமுன்னே கட்டிமுடித்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம். 12எங்கள் முற்பிதாக்கள் பரலோகத்தின் தேவனைக் கோபப்படுத்தியதால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை இடித்து, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். 13ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருடத்திலே கோரேஸ் ராஜா தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு கட்டளையிட்டார். 14நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன், வெள்ளித் தட்டுமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து. அவர் தேசத்து ஆளுனராக ஏற்படுத்திய செஸ்பாத்சாரென்னும் பெயருள்ளவனிடத்தில் அவைகளை ஒப்படைத்து, 15அவனை நோக்கி: நீ இந்தத் தட்டுமுட்டுகளை எடுத்து, எருசலேமில் இருக்கும் தேவாலயத்திற்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் இடத்திலே கட்டப்படவேண்டும் என்றார். 16அப்பொழுது அந்த செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டான்; அந்தநாள்முதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது; அது இன்னும் நிறைவடையவில்லை என்றார்கள். 17இப்பொழுதும் ராஜாவுக்கு சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட, ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்து பார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய விருப்பம் என்னவென்று எங்களுக்கு எழுதியனுப்பவும், கட்டளையிடவும்வேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.

Currently Selected:

எஸ்றா 5: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in