YouVersion Logo
Search Icon

எஸ்றா 1

1
அத்தியாயம் 1
சிறையிருப்பிலுள்ள மக்கள் திரும்பிச் செல்ல ராஜாவாகிய கோரேஸ் உதவுதல்
1எரேமியாவின் வாயினால் யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறுவதற்காக, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருடத்திலே, யெகோவா பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியைத் தூண்டியதாலே அவன்: 2பரலோகத்தின் தேவனாகிய யெகோவா பூமியின் தேசங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்ட எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். 3அவருடைய மக்கள் எல்லோரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனுடன் அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவானாக; எருசலேமில் வாசம்செய்கிற தேவனே தேவன். 4அந்த மக்களில் மீதியாயிருக்கிறவன் எந்த இடத்தில் தங்கியிருக்கிறானோ, அந்த இடத்தின் மக்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாகக் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமல்லாமல், அவனுக்குப் பொன், வெள்ளி முதலிய பொருட்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து உதவி செய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் தேசமெங்கும் எழுதியனுப்பி அறிவிப்பு செய்தான். 5அப்பொழுது எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவதற்குப் போக யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவர்களும் ஆசாரியர்களும் லேவியர்களும் அல்லாமல், எவர்களுடைய ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லோரும் எழும்பினார்கள். 6அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற அனைவரும் மனஉற்சாகமாகக் காணிக்கை கொடுத்ததுமல்லாமல், வெள்ளிப் பொருட்களையும், பொன்னையும் மற்ற பொருட்களையும் மிருகஜீவன்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் கொடுத்து, அவர்களுடைய கைகளைத் திடப்படுத்தினார்கள். 7நேபுகாத்நேச்சார்#1:7 நேபுகாத்நேச்சார் பாபிலோனின் இராஜாவாக கிமு 605 லிருந்து 562 வரை ஆட்சி செய்தான். கிமு 597 ல் முற்றுகையிட்டு, கிமு 586 ல் எருசலேமின் ஆலயத்தை அழித்துப்போட்டான். 597 ல் 586 ல் 582 ல் யூதாவிலிருந்து பலரை சிறைப்படுத்தி பாபிலோனுக்கு கொண்டுச் சென்றான். 597 லும் 586 லும் ஆலயத்திலுள்ள விலையேறப்பெற்ற பொருட்களை கொள்ளையடித்து சென்றான் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த யெகோவாவுடைய ஆலயத்து பொருட்களையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான். 8அவைகளைப் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் பொக்கிஷக்காரனாகிய மித்திரேதாத்தின் கையினால் எடுக்கச்செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக்கொடுத்தான். 9அவைகளின் தொகையாவது: பொன் பாத்திரங்கள் 30, வெள்ளிப்பாத்திரங்கள் 1,000, கத்திகள் 29 10பொற்கிண்ணங்கள் 30 வெள்ளிக் கிண்ணங்கள் 410, மற்றப் பொருட்கள் 1,000 11பொன் வெள்ளிப் பொருட்களெல்லாம் 5,400, இவைகளையெல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகும்போது எடுத்துக் கொண்டுபோனான்.

Currently Selected:

எஸ்றா 1: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in