YouVersion Logo
Search Icon

எசேக் 8

8
அத்தியாயம் 8
ஆலயத்திற்குள் விக்கிரகம்
1பாபிலோனின் சிறையிருப்பின் ஆறாம் வருடத்தின் ஆறாம் மாதம் ஐந்தாம்தேதியிலே, நான் என்னுடைய வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், யூதாவின் மூப்பர்கள் எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறபோதும், யெகோவாகிய ஆண்டவருடைய கரம் அங்கே என்மேல் அமர்ந்தது. 2அப்பொழுது இதோ, அக்கினிச்சாயலாகத் தோன்றுகிற ஒருவரைக் கண்டேன்; அவருடைய இடுப்புக்குக் கீழெல்லாம் அக்கினியும் அவருடைய இடுப்புக்கு மேலெல்லாம் உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் சாயலுமாக இருந்தது. 3கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என்னுடைய தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார்; தேவ ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்திற்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடக்குதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சல் உண்டாக்குகிற விக்கிரகத்தின் இடம் இருந்தது. 4இதோ, நான் பள்ளத்தாக்கிலே கண்டிருந்த தரிசனத்திற்குச் சரியாக இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அங்கே விளங்கினது. 5அவர் என்னைப் பார்த்து: மனிதகுமாரனே, உன்னுடைய கண்களை ஏறெடுத்து, வடக்கே பார் என்றார்; அப்பொழுது நான் என்னுடைய கண்களை ஏறெடுத்து, வடக்கே பார்த்தேன்; இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; முன்வாசலிலே எரிச்சல் உண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது. 6அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாகப் போகச்செய்யும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி, 7என்னை முற்றத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன். 8அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது. 9அவர் என்னைப் பார்த்து: நீ உள்ளேபோய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார். 10நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, எல்லாவித ஊரும் உயிரினங்களும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் உருவங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய அசுத்தமான எல்லா சிலைகளும் சுவரில் சுற்றிலும் செதுக்கப்பட்டிருந்தன. 11இஸ்ரவேலின் மூப்பர்களில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய மகனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள்; தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று. 12அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இஸ்ரவேலர்களின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்களுடைய சிலைகளின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? யெகோவா எங்களைப் பார்க்கிறதில்லை; யெகோவா தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார். 13பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி, 14என்னைக் யெகோவாவுடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டுபோனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக#8:14 கிழக்கத்தியர்கள் மத்தியிலே ஒரு வழக்கம் என்னவென்றால் தம்மூசு, தெய்வம் பயிர்கள் மரித்தவுடன் மரித்துவிடும், அடுத்த வருடம் மரணத்திலிருந்து எழுந்து விடும், ஆகையால் வருட வருடம் துக்கம் கொண்டாடுவார்கள் அழுதுகொண்டிருக்கிற பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். 15அப்பொழுது அவர்: மனிதகுமாரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி, 16என்னைக் யெகோவாவுடைய ஆலயத்தின் உள்முற்றத்திற்கு கொண்டுபோனார்; இதோ, யெகோவாவுடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்கள், தங்களுடைய முதுகைக் யெகோவாவுடைய ஆலயத்திற்கும் தங்களுடைய முகத்தைக் கிழக்குத்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாகக் கிழக்கே இருக்கும் சூரியனை வணங்கினார்கள். 17அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்களுடைய தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சைக்கிளையைத் தங்களுடைய மூக்கிற்கு நேராகப் பிடிக்கிறார்கள். 18ஆகையால் நானும் கடுங்கோபத்துடன் காரியத்தை நடத்துவேன்; என்னுடைய கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள் மகா சத்தமாக என்னுடைய காதுகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் கேட்பதில்லை என்றார்.

Currently Selected:

எசேக் 8: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in