YouVersion Logo
Search Icon

எசேக் 3

3
அத்தியாயம் 3
இஸ்ரவேலை எச்சரித்தல்
1பின்பு அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ காண்கிறதை சாப்பிடு; இந்தச் சுருளை நீ சாப்பிட்டு, இஸ்ரவேல் மக்களிடம் போய் அவர்களுடன் பேசு என்றார். 2அப்படியே என்னுடைய வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்கு சாப்பிடக்கொடுத்து: 3மனிதகுமாரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன்னுடைய வயிற்றிற்கு உட்கொண்டு, அதினால் உன்னுடைய குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதை சாப்பிட்டேன்; அது என்னுடைய வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாக இருந்தது. 4பின்பு அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ போய், இஸ்ரவேல் மக்களிடம் போய், என்னுடைய வார்த்தைகளைக் கொண்டு அவர்களுடன் பேசு. 5புரியாத பேச்சும், கடினமான மொழியுமுள்ள மக்கள் அருகில் அல்ல, இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய். 6புரியாத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான மொழியுமுள்ள திரளான மக்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உன்னுடைய பேச்சை கேட்பார்களோ? 7இஸ்ரவேல் மக்களோவெனில், உன்னுடைய பேச்சை கேட்கமாட்டார்கள்; என்னுடைய பேச்சையே கேட்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் மக்கள் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள். 8இதோ, உன்னுடைய முகத்தை அவர்களுடைய முகத்திற்கு முன்பாகவும், உன்னுடைய நெற்றியை அவர்களுடைய நெற்றிக்கு முன்பாகவும் கடினமாக்கினேன். 9உன்னுடைய நெற்றியை வச்சிரக்கல்லைப் போலாக்கினேன், கன்மலையைவிட கடினமாக்கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென்று நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்களுடைய முகங்களுக்கு கலங்காமலும் இரு என்றார். 10பின்னும் அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நான் உன்னுடனே சொல்லும் என்னுடைய வார்த்தைகளையெல்லாம் நீ உன்னுடைய காதாலே கேட்டு, உன்னுடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, 11நீ போய், சிறைப்பட்ட உன்னுடைய மக்களிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்களுடன் பேசி, யெகோவாகிய ஆண்டவர் இன்னின்னதை சொல்கிறார் என்று அவர்களுடன் சொல் என்றார். 12அப்பொழுது தேவனுடைய ஆவி, என்னை உயர எடுத்துக்கொண்டது; யெகோவாவுடைய இடத்திலிருந்து வெளிப்பட்ட அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன். 13ஒன்றோடொன்று இணைந்திருக்கிற உயிர்களுடைய இறக்கைகளின் இரைச்சலையும், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன். 14தேவனுடைய ஆவி என்னை உயர எடுத்துக்கொண்டது; நான் என்னுடைய ஆவியின் கடுங்கோபத்தினாலே மனங்கசந்து போனேன்; ஆனாலும் யெகோவாவுடைய கரம் என்மேல் பலமாக இருந்தது. 15கேபார் நதியின் அருகிலே தெலாபீபிலே தங்கியிருக்கிற சிறைப்பட்டவர்களிடத்திற்கு நான் வந்து, அவர்கள் வாழ்கிற இடத்திலே வாழ்ந்து, ஏழுநாட்கள் அவர்களின் நடுவிலே பிரமித்தவனாகத் தங்கினேன். 16ஏழுநாட்கள் முடிந்தபின்பு யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 17மனிதகுமாரனே, உன்னை இஸ்ரவேல் மக்களுக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என்னுடைய வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என்னுடைய பெயராலே அவர்களை எச்சரிப்பாயாக. 18இறக்கவே இறப்பாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, நீ துன்மார்க்கனைத் தன்னுடைய துன்மார்க்கமான வழியில் இல்லாதபடி எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடு காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன்னுடைய துன்மார்க்கத்திலே இறப்பான்; அவனுடைய இரத்தப்பழியையோ உன்னிடம் கேட்பேன். 19நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன்னுடைய துன்மார்க்கத்தையும் தன்னுடைய ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமல்போனால், அவன் தன்னுடைய துன்மார்க்கத்திலே மரிப்பான்; நீயோவென்றால் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பாற்றுவாய். 20அப்படியே, நீதிமான் தன்னுடைய நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் மரிப்பான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன்னுடைய பாவத்திலே மரிப்பான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன்னுடைய கையிலே கேட்பேன். 21நீதிமான் பாவம் செய்யாதபடி நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவம்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பாற்றினாய் என்றார். 22அந்த இடத்திலே யெகோவாவுடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து சமவெளிக்கு புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடன் பேசுவேன் என்றார். 23அப்படியே நான் எழுந்திருந்து, சமவெளிக்கு புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியின் அருகிலே நான் கண்ட மகிமைக்குச் சரியாக அங்கே யெகோவாவுடைய மகிமை வெளிப்பட்டது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன். 24உடனே தேவனுடைய ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலூன்றி நிற்கச்செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி: நீ போய், உன்னுடைய வீட்டுக்குள்ளே உன்னை அடைத்துக்கொண்டிரு. 25இதோ, மனிதகுமாரனே, உன்மேல் கயிறுகளைப்போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போகவேண்டாம். 26நான் உன்னுடைய நாக்கை உன்னுடைய மேல்வாயுடன் ஒட்டிக்கொள்ளச்செய்வேன்; நீ அவர்களைக் கடிந்து கொள்ளுகிற மனிதனாக இல்லாமல், ஊமையனாக இருப்பாய்; அவர்கள் கலகம்செய்கிற மக்கள். 27நான் உன்னுடன் பேசும்போது, உன்னுடைய வாயைத் திறப்பேன்; அப்பொழுது யெகோவாகிய ஆண்டவர் இன்னின்னதைச் சொன்னார் என்று அவர்களுடன் சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேட்காதவன் கேட்காமல் இருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.

Currently Selected:

எசேக் 3: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in