YouVersion Logo
Search Icon

எசேக் 18

18
அத்தியாயம் 18
பாவம் செய்கிற ஆத்துமா சாகும்
1யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2பிதாக்கள் திராட்சைக்காய்களை சாப்பிட்டார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போனது என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துச் சொல்லுகிறது என்ன? 3இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 4இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும். 5ஒருவன் நீதிமானாக இருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து, 6மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் மக்களின் அசுத்தமான சிலைகளுக்கு நேராகத் தன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும் தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் மாதவிடாயுள்ள பெண்ணுடன் சேராமலும், 7ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன்னுடைய அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடையில்லாதவனுக்கு ஆடை அணிவித்து, 8வட்டிக்குக் கொடுக்காமலும், அதிக லாபம் வாங்காமலும், அநியாயத்திற்குத் தன்னுடைய கையை விலக்கி, மனிதர்களுக்குள்ள வழக்கை உண்மையாகத் தீர்த்து, 9என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாக இருந்தால் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 10ஆனாலும் அவனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தம் சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடக்காமல், 11இவைகளில் ஒன்றுக்கு ஒப்பானதைச் செய்கிறவனுமாக இருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி, 12சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாக இருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடுக்காமல், அசுத்தமான சிலைகளுக்கு நேராக தன்னுடைய கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து, 13வட்டிக்குக் கொடுத்து, அதிகமாக வட்டி வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை; இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் இறக்கவே இறப்பான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும். 14பின்னும், இதோ, அவனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் தன்னுடைய தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடி எச்சரிக்கையாக இருந்து, 15மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் மக்களின் அசுத்தமான சிலைகளுக்கு நேராகத் தன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும், தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும், 16ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிருக்காலும், கொள்ளையடிக்காமலும், தன்னுடைய ஆகாரத்தை பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடை இல்லாதவனுக்கு ஆடை அணிவித்து, 17சிறுமையானவனை துன்பப்படுத்தாதபடித் தன்னுடைய கையை விலக்கி, வட்டியும் அதிகமாக வாங்காமலிருந்து என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினால் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான். 18அவனுடைய தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன்னுடைய மக்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, இவன் தன்னுடைய அக்கிரமத்திலே மரிப்பான். 19இதெப்படி, மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், மகன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான். 20பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும்; மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் மகனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும். 21துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை. 22அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான். 23துன்மார்க்கன் மரணமடைகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன்னுடைய வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 24நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற எல்லா அருவருப்புகளின்படியும் செய்தால், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன்னுடைய துரோகத்திலேயும் அவன் செய்த தன்னுடைய பாவத்திலேயும் மரிப்பான். 25நீங்களோ, ஆண்டவருடைய வழி சரியாக இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் மக்களே, கேளுங்கள்; என்னுடைய வழி சரியாக இருக்காதோ? உங்களுடைய வழிகள் அல்லவோ சரியில்லாததாக இருக்கிறது. 26நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே இறந்தால், அவன் செய்த தன்னுடைய அநீதியினால் அவன் மரிப்பான். 27துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் தன்னுடைய ஆத்துமாவைப் பிழைக்கச்செய்வான். 28அவன் எச்சரிப்படைந்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியினாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை. 29இஸ்ரவேல் மக்களோ: ஆண்டவருடைய வழி ஒழுங்காக இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் மக்களே, என்னுடைய வழிகள் ஒழுங்காக இருக்காதோ? உங்களுடைய வழிகள் அல்லவோ ஒழுங்கில்லாததாக இருக்கிறது. 30ஆகையால் இஸ்ரவேல் மக்களே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தகுந்தபடி நியாயந்தீர்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்களுடைய பொல்லாப்புக்கு காரணமாக இருப்பதில்லை. 31நீங்கள் துரோகம்செய்த உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இல்லாமல் விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டாக்கிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஏன் இறக்கவேண்டும்? 32மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; மரணமடைகிறவனுடைய மரணத்தை நான் விரும்புவதில்லை என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Currently Selected:

எசேக் 18: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in