YouVersion Logo
Search Icon

யாத் 4

4
அத்தியாயம் 4
தேவன் மோசேக்கு கொடுத்த அடையாளங்கள்
1அப்பொழுது மோசே: “அவர்கள் என்னை நம்பமாட்டார்கள்; என்னுடைய வார்த்தையை கேட்கமாட்டார்கள்; யெகோவா உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள்” என்றான். 2யெகோவா அவனை நோக்கி: “உன்னுடைய கையில் இருக்கிறது என்ன” என்றார். “ஒரு கோல்” என்றான். 3“அதைத் தரையிலே போடு” என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது பாம்பாக மாறியது; மோசே அதற்கு விலகி ஓடினான். 4அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “உன்னுடைய கையை நீட்டி, அதின் வாலைப் பிடி” என்றார்; அவன் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவனுடைய கையிலே கோலானது. 5ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாக இருக்கிற தங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். 6மேலும், யெகோவா அவனை நோக்கி: “உன் கையை உன்னுடைய மடியிலே போடு” என்றார்; அவன் தன் கையைத் தன்னுடைய மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவனுடைய கை உறைந்த பனியைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. 7அவர்: “உன்னுடைய கையைத் திரும்பவும் உன்னுடைய உன் மடியிலே போடு” என்றார். அவன் தன்னுடைய கையைத் திரும்பத் தன்னுடைய மடியிலே போட்டு, மீண்டும் வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலானது. 8அப்பொழுது அவர்: “முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உன்னுடைய வார்த்தைகளைக் கேட்காமலும்போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள். 9இந்த இரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன்னுடைய வார்த்தையைக் கேட்காமலும் இருந்தால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை எடுத்து நிலத்தில் ஊற்று; நதியில் எடுத்த தண்ணீர் காய்ந்த நிலத்தில் இரத்தமாகும்” என்றார். 10அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “ஆண்டவரே, இதற்கு முன்பாவது, தேவரீர் உமது அடியேனோடு பேசினதற்குப் பின்பாவது நான் பேச்சில் வல்லவன் இல்லை; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்” என்றான். 11அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: “மனிதனுக்கு வாயை உண்டாக்கியவர் யார்? ஊமையனையும், செவிடனையும், பார்வையுள்ளவனையும், பார்வையற்றவனையும் உண்டாக்கினவர் யார்? யெகோவாவாகிய நான் அல்லவா? 12ஆதலால், நீ போ; நான் உன்னுடைய வாயோடு இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்” என்றார். 13அதற்கு அவன்: “ஆண்டவரே. நீர் அனுப்ப விரும்புகிற யாரையாவது அனுப்பும்” என்றான். 14அப்பொழுது யெகோவா மோசேயின்மேல் கோபப்பட்டு: “லேவியனாகிய ஆரோன் உன்னுடைய சகோதரன் அல்லவா? அவன் நன்றாக பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவனுடைய இருதயம் மகிழும். 15நீ அவனுடன் பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு; நான் உன்னுடைய வாயிலும் அவனுடைய வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்குக் காட்டுவேன். 16அவன் உனக்குப் பதிலாக மக்களோடு பேசுவான்; இந்தவிதமாக அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்கு தேவனாக இருப்பாய். 17இந்தக் கோலையும் உன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய்” என்றார்.
மோசே எகிப்திற்குத் திரும்பினான்.
18மோசே தன்னுடைய மாமனாகிய எத்திரோவிடம் வந்து: “நான் எகிப்திலிருக்கிற என்னுடைய சகோதரர்களிடத்திற்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்திரவு தரவேண்டும்” என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: “சுகமாகப் போய்வாரும்” என்றான். 19பின்னும் யெகோவா மீதியானிலே மோசேயை நோக்கி: “நீ எகிப்திற்குத் திரும்பிப் போ, உன்னுடைய உயிரை எடுக்கத்தேடின மனிதர்கள் எல்லோரும் இறந்துபோனார்கள்” என்றார். 20அப்பொழுது மோசே தன்னுடைய மனைவியையும் தன்னுடைய பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்திற்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு போனான். 21அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ எகிப்திலே திரும்பிப்போய்ச் சேர்ந்தபின்பு, நான் உன்னுடைய கையில் கொடுத்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாக செய்யும்படி எச்சரிக்கையாக இரு; ஆனாலும், நான் அவனுடைய இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் மக்களைப் போகவிடமாட்டான். 22அப்பொழுது நீ பார்வோனோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய மகன், என்னுடைய மூத்தமகன். 23எனக்கு ஆராதனை செய்யும்படி என்னுடைய மகனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்று சொன்னால் நான் உன்னுடைய மகனை, உன்னுடைய மூத்தமகனை கொல்லுவேன் என்று யெகோவா சொன்னார் என்று சொல்” என்றார். 24வழியிலே தங்கும் இடத்தில் யெகோவா மோசேக்கு எதிராக வந்து, அவனைக் கொல்லநினைத்தார். 25அப்பொழுது சிப்போராள் ஒரு கூர்மையான கல்லை எடுத்து, தன் மகனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவனுடைய கால்களுக்கு#4:25 தன் மகனின் இரத்தத்தினால் அவள் தன் கணவரின் ஜீவனை காப்பற்றினாள். முன்பாக போட்டு: “நீர் எனக்கு இரத்தசம்பந்தமான கணவன்” என்றாள். 26பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: “விருத்தசேதனத்தினால் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான கணவன்” என்றாள்.
27ஆரோனை நோக்கி: “நீ வனாந்திரத்தில் மோசேயை சந்திக்கப்போ” என்றார். அவன் போய், தேவனுடைய மலையில் அவனைச் சந்தித்து, அவனை முத்தமிட்டான். 28அப்பொழுது மோசே தன்னை அனுப்பின யெகோவாவுடைய எல்லா வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட எல்லா அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான். 29மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேலர்களுடைய மூப்பர்கள் எல்லோரையும் கூடிவரச் செய்தார்கள். 30யெகோவா மோசேக்குச் சொல்லிய எல்லா வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, மக்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான். 31மக்கள் விசுவாசித்தார்கள்; யெகோவா இஸ்ரவேலர்களைச் சந்தித்தார் என்றும், அவர்களுடைய உபத்திரவங்களைக் கண்ணோக்கிப் பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்து தொழுதுகொண்டார்கள்.

Currently Selected:

யாத் 4: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in