YouVersion Logo
Search Icon

எஸ்த 4

4
அத்தியாயம் 4
மொர்தெகாய் எஸ்தரை உதவி செய்யும்படி வற்புறுத்துதல்
1நடந்த எல்லாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, சணலாடை அணிந்து, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள உரத்த சத்தத்துடன் அலறிக்கொண்டு, 2ராஜாவின் அரண்மனை வாசல்வரை வந்தான்; சணலாடை அணிந்தவனாக ராஜாவின் அரண்மனை வாசலுக்குள் நுழைய ஒருவனுக்கும் அனுமதி இல்லை. 3ராஜாவின் உத்திரவும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் யூதர்களுள்ள பகுதிகளில் பெரிய துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாகி, அநேகர் சணலாடை அணிந்து சாம்பலில் கிடந்தார்கள். 4அப்பொழுது எஸ்தரின் இளம்பெண்களும், அவளுடைய பணிவிடைக்காரர்களும் போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராணி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்தியிருந்த சணலாடையை எடுத்துப்போட்டு, அவனுக்கு அணிந்துகொள்ள ஆடைகளை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தான். 5அப்பொழுது எஸ்தர் தன்னுடைய பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய அதிகாரிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைத்து: காரியம் என்ன? அதின் காரணம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடம் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள். 6அப்படியே ஆத்தாகு ராஜாவின் அரண்மனை வாசலுக்கு முன்னான பட்டணத்து வீதியில் இருக்கிற மொர்தெகாயிடம் புறப்பட்டுப்போனான். 7அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதர்களை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கருவூலத்திற்கு எண்ணிக்கொடுப்பேன் என்று சொன்ன பணத்தொகையைப் பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அல்லாமல், 8யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடம் கொடுத்து, அதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் தைரியமாக ராஜாவிடம் போய், அவனிடம் தன்னுடைய மக்களுக்காக விண்ணப்பம்செய்யவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச்சொன்னான். 9ஆத்தாகு வந்து, மொர்தெகாயின் வார்த்தைகளை எஸ்தருக்கு அறிவித்தான். 10அப்பொழுது எஸ்தர் ஆத்தாகிடம் மொர்தெகாய்க்குச் சொல்லியனுப்பினது: 11யாராவது அழைக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவிடம் வந்தால், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படி அவர்களுக்கு நேராக ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு சட்டமுண்டு, இது ராஜாவின் எல்லா வேலைக்காரர்களுக்கும், ராஜாவுடைய நாடுகளிலுள்ள எல்லா மக்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பது நாட்களாக ராஜாவிடம் வரவழைக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள். 12எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள். 13மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரண்மனையில் இருக்கிறதினால், மற்ற யூதர்கள் தப்ப முடியாமல் இருக்கும்போது, நீ தப்புவாயென்று உன்னுடைய மனதிலே நினைவுகொள்ளாதே. 14நீ இந்தக் காலத்திலே மவுனமாக இருந்தால், யூதருக்கு உதவியும் விடுதலையும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன்னுடைய தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்திற்கு உதவியாக இருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். 15அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது: 16நீர் போய், சூசானில் இருக்கிற யூதர்களையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாட்கள் இரவும் பகலும் சாப்பிடாமலும் குடிக்காமலுமிருந்து, எனக்காக உபவாசம் இருங்கள்; நானும் என்னுடைய பணிவிடைப்பெண்களும் உபவாசம் இருப்போம்; இப்படியே சட்டத்தை மீறி, ராஜாவிடம் போவேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள். 17அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்தான்.

Currently Selected:

எஸ்த 4: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in