YouVersion Logo
Search Icon

எஸ்த 2

2
அத்தியாயம் 2
எஸ்தர் ராணியாக நியமிக்கப்படுதல்
1இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் கோபம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான். 2அப்பொழுது ராஜாவிற்குப் பணிவிடை செய்கிற அவனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: அழகாக இருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத் தேடவேண்டும். 3அதற்காக ராஜா தம்முடைய ராஜ்ஜியத்தின் நாடுகளிலெல்லாம் பொறுப்பாளர்களை வைக்கவேண்டும்; இவர்கள் அழகாக இருக்கிற எல்லா கன்னிப்பெண்களையும் ஒன்றுகூட்டி, சூசான் அரண்மனையில் இருக்கிற கன்னிமாடத்திற்கு அழைத்துவந்து, பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய யேகாயினிடம் ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். 4அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி, வஸ்திக்கு பதிலாகப் பட்டத்து ராணியாகவேண்டும் என்றார்கள்; இந்த வார்த்தை ராஜாவிற்கு நலமாகத் தோன்றியபடியால் அப்படியே செய்தான்.
5அப்பொழுது சூசான் அரண்மனையிலே பென்யமீனியனாகிய கீசின் மகன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் மகன் மொர்தெகாய் என்னும் பெயருள்ள ஒரு யூதன் இருந்தான். 6அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது, அவனோடு எருசலேமிலிருந்து பிடித்து கொண்டுபோகப்பட்டவர்களில் ஒருவனாக இருந்தான். 7அவன் தன்னுடைய சிறிய தகப்பனின் மகளாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பன் இல்லை; அந்தப் பெண் அழகும் விரும்பத்தக்கவளுமாக இருந்தாள்; அவளுடைய தகப்பனும், தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன்னுடைய மகளாக எடுத்துக்கொண்டான். 8ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரபலமாகி, அநேக பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரண்மனையிலுள்ள யேகாயினிடத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, பெண்களைக் காவல்காக்கிற யேகாயினிடம் ஒப்புவிக்கப்பட்டாள். 9அந்தப் பெண் அவனுடைய பார்வைக்கு நன்றாக இருந்ததால், அவளுக்கு அவனுடைய கண்களிலே தயவு கிடைத்தது; ஆகையால் அவளுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரண்மனையில் இருக்கிற ஏழு பணிப்பெண்களை அவளுக்கு நியமித்து கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவளுடைய பணிப்பெண்களையும் வைத்தான். 10எஸ்தரோ தன்னுடைய மக்களையும், தன்னுடைய உறவினர்களையும் அறிவிக்காமல் இருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான். 11எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்கும் காரியத்தையும் அறிய மொர்தெகாய் தினந்தோறும் கன்னிமாடத்து முற்றத்திற்கு முன்பாக உலாவுவான். 12ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதங்கள் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதங்கள் வாசனைப்பொருட்களாலும், பெண்களுக்குரிய மற்ற அலங்கரிப்புகளினாலும் அலங்கரிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இப்படியாக பெண்களின் முறையின்படி பன்னிரண்டு மாதங்களாகச் செய்துமுடித்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடம் வர, அவளவளுடைய முறை வருகிறபோது, 13இப்படி அலங்கரிக்கப்பட்ட பெண் ராஜாவிடம் போவாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடு ராஜ அரண்மனைக்குப் போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவைகளை எல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும். 14மாலையில் அவள் உள்ளே போய், காலையில், பிடித்த பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய சாஸ்காசுடைய பொறுப்பில் இருக்கிற பெண்களின் இரண்டாம் மாடத்திற்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பெயர்சொல்லி அழைக்கும்வரை அவள் ஒருபோதும் ராஜாவிடம் போகக்கூடாது. 15மொர்தெகாய் தனக்கு மகளாய் ஏற்றுக்கொண்டவளும், அவனுடைய சிறிய தகப்பனாகிய அபியாயேலின் மகளுமான எஸ்தர் ராஜாவிடம் போவதற்கு முறை வந்தபோது, அவள் பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய யேகாய் நியமித்த காரியத்தைத் தவிர வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லோருடைய கண்களிலும் தயவு கிடைத்தது. 16அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருடம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே அரண்மனைக்கு ராஜாவிடம் அழைத்துக்கொண்டு போகப்பட்டாள். 17ராஜா எல்லாப் பெண்களையும்விட எஸ்தர்மேல் அன்புவைத்தான்; எல்லா கன்னிப்பெண்களையும்விட அவளுக்கு ராஜாவிற்கு முன்பாக அதிக தயவும் இரக்கமும் கிடைத்தது; ஆகையால் ராஜா ராஜகிரீடத்தை அவளுடைய தலையின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் இடத்தில் பட்டத்து ராணியாக்கினான். 18அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் வேலைக்காரர்களுக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்கும் கரிசனையோடு வரிவிலக்கு உண்டாக்கி, தன்னுடைய கொடைத்தன்மைக்கு ஏற்றவாறு வெகுமானங்களைக் கொடுத்தான்.
மொர்தெகாய் சதித்திட்டத்தை அறிதல்
19இரண்டாம்முறை கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருந்தான். 20எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தன்னுடைய உறவினர்களையும் தன்னுடைய மக்களையும் தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர் மொர்தெகாயிடம் வளரும்போது அவனுடைய சொல்லைக்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவனுடைய சொல்லைக்கேட்டு நடந்துவந்தாள். 21அந்த நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு வாசல் காவலாளிகள் பிக்தானாவும் தேரேசும் கடுங்கோபத்துடன், ராஜாவாகிய அகாஸ்வேருக்கு தீங்குசெய்ய வாய்ப்பைத் தேடினார்கள். 22இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததால், அவன் அதை ராணியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பெயரால் அதை ராஜாவிற்குச் சொன்னாள். 23அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது உண்மையென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புத்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.

Currently Selected:

எஸ்த 2: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in