YouVersion Logo
Search Icon

எபே 5

5
அத்தியாயம் 5
1எனவே, நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து, 2கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு இனிய வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புவைத்ததுபோல, நீங்களும் அன்பாக நடந்துகொள்ளுங்கள். 3மேலும், பரிசுத்தவான்களுக்குத் தகுந்தபடி, வேசித்தனமும், மற்ற எந்த ஒரு அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர்கள்கூட உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது. 4அப்படியே நிந்தனையும், புத்தியில்லாத பேச்சும், பரிகாசம் செய்வதும் தவறானவைகள்; ஸ்தோத்திரம் செய்வதே நல்லது. 5விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரக ஆராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே இடம் பெறுவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. 6இப்படிப்பட்டவைகளினால் கீழ்ப்படியாத பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வருவதால், யாரும் வீண்வார்த்தைகளினாலே உங்களை ஏமாற்றாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; 7அப்படிப்பட்டவர்களோடு சேராமல் இருங்கள். 8முற்காலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாக இருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள். 9வெளிச்சத்தின் கனி, எல்லா நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் தெரியும். 10கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். 11கனி இல்லாத இருளின் செயல்களுக்கு உடன்படாமல், அவைகள் தவறானவைகள் என்று சுட்டிக்காட்டுங்கள். 12அவர்கள் மறைவான இடத்தில் செய்யும் செயல்களைச் சொல்லுகிறதும் வெட்கமாக இருக்கிறதே. 13அவைகள் எல்லாம் வெளிச்சத்தினால் வெளியாக்கப்படும்; வெளியாக்கப்படுவது எல்லாம் வெளிச்சமாக இருக்கிறது. 14எனவே, தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார் என்று சொல்லியிருக்கிறார். 15எனவே, நீங்கள் ஞானம் இல்லாதவர்களைப்போல நடக்காமல், ஞானம் உள்ளவர்களைப்போலக் கவனமாக நடந்துகொண்டு, 16நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 17எனவே, நீங்கள் அறிவில்லாதவர்களாக இல்லாமல், கர்த்தருடைய விருப்பம் என்னவென்று உணர்ந்துகொள்ளுங்கள். 18பொல்லாதவழிக்கு உன்னைக் கொண்டுச்செல்லும் மதுபானத்தை நீ குடித்து வெறிகொள்ளாமல், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து; 19சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்தில் கர்த்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, 20நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, 21தெய்வபயத்தோடு ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
கணவன் மனைவி உறவு
22மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்களுடைய சொந்தக் கணவருக்குக் கீழ்ப்படியுங்கள். 23கிறிஸ்து சபைக்குத் தலையாக இருக்கிறதுபோல, கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்; கிறிஸ்துவே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார். 24எனவே, சபையானது கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்களுடைய சொந்தக் கணவர்களுக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். 25கணவர்களே, உங்களுடைய மனைவிகளிடம் அன்பாக இருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையின்மேல் அன்பாக இருந்து, 26தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்தப்படுத்தி, பரிசுத்தமாக்குகிறதற்கும், 27கறையேதும்இல்லாமல் பரிசுத்தமும் பிழை இல்லாததுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். 28அப்படியே, கணவர்களும் தங்களுடைய மனைவிகளைத் தங்களுடைய சொந்த சரீரங்களாக நினைத்து, அவர்கள்மேல் அன்பாக இருக்கவேண்டும்; தன் மனைவியிடம் அன்பாக இருக்கிறவன் தன்னைத்தானே நேசிக்கிறான். 29தன் சொந்த சரீரத்தைப் பகைத்தவன் ஒருவனும் இல்லையே; கர்த்தர் சபையைப் பேணிக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் சரீரத்தைப் பேணிக்காப்பாற்றுகிறான். 30நாம் அவருடைய சரீரத்தின் பாகங்களாகவும், அவருடைய சரீரத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாகவும் இருக்கிறோம். 31இதனால் மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள். 32இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். 33எப்படியும், உங்கள்மேல் நீங்கள் அன்பாக இருப்பதுபோல, உங்களுடைய மனைவிகளிடமும் அன்பாக இருக்கவேண்டும்; மனைவியும் கணவனிடத்தில் பயபக்தியாக இருக்கவேண்டும்.

Currently Selected:

எபே 5: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in