YouVersion Logo
Search Icon

உபா 22

22
அத்தியாயம் 22
ஆண்-பெண் உடை
1“உன் சகோதரனுடைய மாடாவது ஆடாவது வழிதப்பிப்போகிறதை நீ கண்டால், அதைக் காணாதவன்போல் இருக்காமல், அதை உன் சகோதரனிடத்திற்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய். 2உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும், உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால், நீ அதை உன் வீட்டிற்குக் கொண்டுபோய், அதை உன் சகோதரன் தேடிவரும்வரை உன்னிடத்திலே வைத்து, அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய். 3அப்படியே அவனுடைய கழுதையைக்குறித்தும் செய்யக்கடவாய்; அவன் உடையைக்குறித்தும் அப்படியே செய்யக்கடவாய்; உன் சகோதரனிடத்திலிருந்து காணாமற்போனவைகளில் எதையாகிலும் கண்டுபிடித்தாயானால் அப்படியே செய்யக்கடவாய்; அவைகளை நீ காணாதவன் போல் விட்டுப்போகக்கூடாது. 4“உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதை நீ கண்டால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனுடன்கூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக. 5“ஆண்களின் உடைகளை பெண்கள் அணியக்கூடாது, பெண்களின் உடைகளை ஆண்கள் அணியக்கூடாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லோரும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். 6“வழியருகே ஒரு மரத்திலோ தரையிலோ குஞ்சுகளாவது முட்டைகளாவது உள்ள ஒரு குருவிக்கூட்டை நீ பார்க்கும்போது, தாயானது குஞ்சுகளின் மேலாவது முட்டைகளின் மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளுடன் தாயையும் பிடிக்கக்கூடாது. 7தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும். 8“நீ புது வீட்டைக் கட்டினால், ஒருவன் அதன் மாடியிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாமலிருக்க, அதற்குக் கைப்பிடிச் சுவரைக் கட்டவேண்டும். 9“உன் திராட்சைத்தோட்டத்திலே பலவிதமான விதையை விதைக்காதே; இப்படிச் செய்தால் நீ விதைத்த விதைகளின் பயிரையும், திராட்சைத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்#22:9 இந்த நிலத்தில் வளர்ந்ததை ஆலயத்திற்கு கொண்டுவரவேண்டும். 10மாட்டையும், கழுதையையும் இணைத்து உழாதிருப்பாயாக. 11ஆட்டுரோமமும் பஞ்சுநூலும் கலந்த ஆடையை அணியாதே. 12“நீ அணிந்துகொள்கிற உன் மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டாக்குவாயாக.
திருமணச் சட்டங்கள்
13“ஒரு பெண்ணைத் திருமணம்செய்த ஒருவன் அவளிடத்தில் உறவுகொண்ட பின்பு அவளை வெறுத்து: 14நான் இந்தப் பெண்ணைத் திருமணம்செய்து, அவளிடத்தில் உறவுகொண்டபோது கன்னித்தன்மையைக் காணவில்லை என்று அவள் மேல் குற்றம் சுமத்தி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்; 15அந்தப் பெண்ணின் தகப்பனும் தாயும் அவளுடைய கன்னித்தன்மையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பர்களிடத்தில் கொண்டுவரக்கடவர்கள். 16அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து, 17நான் உன் மகளிடத்தில் கன்னித்தன்மையைக் காணவில்லையென்று அவள்மேல் குற்றம் சுமத்துகிறான்; என் மகளுடைய கன்னித்தன்மையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பர்களிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பர்களுக்கு முன்பாக அந்த ஆடையை விரிக்கக்கடவர்கள். 18அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து, 19அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுசெய்ததால், அவன் கையிலிருந்து நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கவேண்டும்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தான் உயிருள்ளவரை அவளைத் தள்ளிவிடக்கூடாது. 20அந்தப் பெண்ணிடத்தில் கன்னித்தன்மை காணப்படவில்லையென்னும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 21அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டில்#22:21 தன் தகப்பனுடைய பார்வையில் இருந்த போதும் செய்ததால். வேசித்தனம்செய்ததால், அவளுடைய பட்டணத்து மனிதர்கள் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. 22“ஆணுக்கு திருமணம்செய்யப்பட்ட பெண்ணுடன் ஒருவன் உறவுகொள்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பெண்ணுடன் உறவுகொண்ட மனிதனும் அந்த பெண்ணும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்குவாயாக. 23“கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளுடன் உறவுகொண்டால், 24அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூச்சலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. 25“ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாகப் பிடித்து, அவளுடன் உறவுகொண்டானேயாகில், அவளுடன் உறவுகொண்ட மனிதன் மாத்திரம் சாகக்கடவன். 26பெண்ணுக்கு ஒன்றும் செய்யக்கூடாது; பெண்ணின்மேல் மரணத்திற்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனைக் கொன்றதுபோல இருக்கிறது. 27வெளியிலே அவன் அவளைக் கண்டான்; நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண் அச்சமயத்தில் கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுபவர் இல்லாமற்போனது.
28“நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், 29அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்ததால், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது. 30“ஒருவனும் தன் தகப்பனுடைய மனைவியுடன்#22:30 தகப்பனுடைய எந்த மனைவியுடன் உறவுகொள்ளக்கூடாது; தன் தகப்பன் மானத்தை அவன் வெளிப்படுத்தக்கூடாது.

Currently Selected:

உபா 22: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in