YouVersion Logo
Search Icon

அப் 19

19
அத்தியாயம் 19
எபேசு பட்டணத்தில் பவுல்
1அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கும்போது, பவுல் மேடான தேசங்கள்வழியாகப்போய், எபேசுவிற்கு வந்தான்; அங்கே சில சீடர்களைக் கண்டு: 2நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவியானவர் உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். 3அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். 4அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாக இருக்கவேண்டும் என்று மக்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். 5அதைக் கேட்டபொழுது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். 6அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கரங்களை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் பிறமொழிகளைப் பேசி தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 7அந்த மனிதர்கள் ஏறக்குறைய பன்னிரண்டுபேராக இருந்தார்கள். 8பின்பு பவுல் ஜெப ஆலயத்தில் உள்ளே வந்து, தைரியமாகப் பிரசங்கித்து, மூன்று மாதங்கள்வரை தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்து கலந்துரையாடி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான். 9சிலர் கடினப்பட்டு நம்பிக்கையற்றவர்களாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை இகழ்ந்து பேசியபோது, அவன் அவர்களைவிட்டு விலகி, சீடர்களை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய கல்விக்கூடத்திலே அநுதினமும் கலந்துரையாடிக்கொண்டிருந்தான். 10இரண்டு வருடகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதர்களும் கிரேக்கர்களுமாகிய எல்லோரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள். 11பவுலின் கைகளினாலே தேவன் அரிய பெரிய அற்புதங்களைச் செய்துகாண்பித்தார். 12அவனுடைய சரீரத்திலிருந்து துண்டுகளையும், கைக்குட்டைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்கள்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன. 13அப்பொழுது நாடோடிகளாகத் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதர்களில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். 14பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய குமாரர்கள் ஏழுபேர் இப்படிச்செய்தார்கள். 15பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, 16அசுத்தஆவியையுடைய மனிதன் அவர்கள்மேல் பாய்ந்து, பலவந்தம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிர்வாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டைவிட்டு ஓடிப்போனார்கள். 17இது எபேசுவிலே குடியிருந்த யூதர்கள் கிரேக்கர்கள் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லோரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. 18விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்களுடைய பொல்லாத வித்தைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். 19மாயவித்தைக்காரர்களாக இருந்தவர்களில் அநேகர் தங்களுடைய புத்தகங்களைக் கொண்டுவந்து, எல்லோருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் விலையைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள். 20இவ்வளவு வல்லமையாக கர்த்தருடைய வசனம் பரவியது. 21இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றி நடந்து, எருசலேமுக்குப் போகும்படி ஆவியில் தீர்மானம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டும் என்று சொல்லி, 22தனக்கு உதவி செய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோத்தேயுவையும் எரஸ்துவையும் மக்கெதோனியாவிற்கு அனுப்பிவிட்டு; தான் பின்னும் சிலநாட்கள் ஆசியாவிலே தங்கினான்.
எபேசுவிலே ஏற்பட்டக் கலகம்
23அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டானது. 24எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பெயர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான். 25இவர்களையும் இப்படிப்பட்டத் தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மக்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள். 26இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலே மாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக மக்களுக்குப் போதித்து, அவர்களைத் தன் பக்கமாகச் சேர்த்துக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள். 27இதனால் நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் சம்பவித்திருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் நினைவில்லாமல் போகிறதற்கும், ஆசியா முழுமையும் உலகமுழுவதும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாக இருக்கிறது என்றான். 28அவர்கள் இதைக்கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டார்கள். 29பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாக வந்த மக்கெதோனியர்களாகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு மண்டபத்திற்கு பாய்ந்தோடினார்கள். 30பவுல் கூட்டத்திற்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீடர்கள் அவனைப் போகவிடவில்லை. 31ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்கு நண்பர்களாக இருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, மண்டபத்திற்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள். 32கூட்டத்தில் குழப்பமுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது. 33அப்பொழுது யூதர்கள் அலெக்சந்தர் என்பவனை முன்னே நிற்கத் தள்ளும்போது, கூட்டத்திலே சிலர் அவனை முன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர் கையால் சைகை காட்டி, மக்களுக்கு உத்தரவுசொல்ல மனதாயிருந்தான். 34அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியர்களுடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரம்வரை எல்லோரும் ஏகமாகச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். 35பட்டணத்து அவைத்தலைவன் மக்களை அமைதிப்படுத்தி: எபேசியர்களே, இந்த பட்டணம் மகா தேவியாகிய தியானாளின் கோவிலும் வானத்திலிருந்து விழுந்த சிலையையும் எபேசியரது நகரின் பாதுகாப்பில் இருக்கிறதென்று அறியாதவன் உண்டோ? 36இதை எவரும் மறுக்கமுடியாத காரியமாகையால், நீங்கள் பதற்றங்கொண்டு ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கவேண்டும். 37இந்த மனிதர்களை இங்கே கொண்டுவந்தீர்கள்; இவர்கள் கோவில் கொள்ளைக்காரர்களும் அல்ல, உங்களுடைய தேவியை நிந்தித்துப் பேசுகிறவர்களும் அல்ல. 38தெமேத்திரியுவிற்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, ஆளுனர்கள் இருக்கிறார்கள்; ஒருவர் பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும். 39நீங்கள் வேறு எந்தவொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டுமானால், அதை சட்டப்படிக் கூடுகின்ற சபையில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். 40இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவு சொல்லுகிறதற்கு எதுவும் இல்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாக இருப்போமே என்று சொல்லி, 41பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான்.

Currently Selected:

அப் 19: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in