YouVersion Logo
Search Icon

2 தெச 3

3
அத்தியாயம் 3
பவுல் அவர்களை ஜெபிக்க வேண்டுதல்
1கடைசியாக, சகோதரர்களே, உங்களிடம் கர்த்தருடைய வசனம் பரவி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரவி மகிமைப்படும்படிக்கும், 2துன்மார்க்கமான பொல்லாத மனிதர்களுடைய கையிலிருந்து நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; விசுவாசம் எல்லோரிடத்திலும் இல்லையே. 3கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீமையிலிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவார். 4மேலும், நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாக இருக்கிறோம். 5கர்த்தர் உங்களுடைய இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராக நடத்துவாராக.
வேலையில்லாமல் இருப்பதைக்குறித்த எச்சரிக்கை
6மேலும், சகோதரர்களே, எங்களிடம் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடக்காமல், சோம்பேறியாக இருக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டுவிலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். 7இன்னவிதமாக எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே சோம்பேறியாக நடக்காமல், 8ஒருவனிடத்திலும் இலவசமாகச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். 9உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாக இருக்கவேண்டுமென்றே அப்படிச்செய்தோம். 10ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும்கூடாதென்று நாங்கள் உங்களிடம் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. 11உங்களில் சிலர் எந்தவொரு வேலையும் செய்யாமல், மற்றவர்களுடைய வேலையில் தலையிட்டு, சோம்பேறிகளாகத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். 12இப்படிப்பட்டவர்கள் அமைதலோடு வேலைசெய்து, தங்களுடைய சொந்த உணவைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம். 13சகோதரர்களே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமல் இருங்கள். 14மேலும், இந்தக் கடிதத்தில் சொல்லிய எங்களுடைய வசனத்திற்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் கவனத்தில் கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனோடுகூட சேராமல் இருங்கள். 15ஆனாலும் அவனை விரோதியாக நினைக்காமல், சகோதரனாக நினைத்து, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.
இறுதி வாழ்த்துதல்
16சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் எல்லாவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக. 17பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், என் கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன். 18நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

Currently Selected:

2 தெச 3: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in