YouVersion Logo
Search Icon

2 கொரி 8

8
அத்தியாயம் 8
எருசலேமில் உள்ள பரிசுத்தவான்களைத் தாங்குதல்
1அன்றியும் சகோதர, சகோதரிகளே மக்கெதோனியா நாட்டு சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம். 2அவர்கள் அதிக உபத்திரவத்தினாலே சோதிக்கப்படும்போது, கொடிய தரித்திரம் உடையவர்களாக இருந்தும், தங்களுடைய பரிபூரண சந்தோஷத்தினாலே அதிக தாராளமாகக் கொடுத்தார்கள். 3மேலும் அவர்கள் தங்களுடைய தகுதிக்கும், தங்களுடைய தகுதிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே விருப்பம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதற்கு, நான் சாட்சியாக இருக்கிறேன். 4தங்களுடைய உதவிகளையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை அதிகமாக வேண்டிக்கொண்டார்கள். 5மேலும் நாங்கள் எதிர்பார்த்தபடி கொடுக்காமல், தேவனுடைய விருப்பத்தினாலே தங்களைத்தாமே, முதலில் கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள். 6எனவே, தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடம் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டும் என்று அவனைக் கேட்டுக்கொண்டோம். 7அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பதிலும், அறிவிலும், எல்லாவிதமான எச்சரிக்கையிலும், எங்கள்மேல் உள்ள உங்களுடைய அன்பிலும், மற்ற எல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும். 8இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய வாஞ்சையைக் கொண்டு, உங்களுடைய அன்பின் உண்மையைச் சோதிப்பதற்காகவே சொல்லுகிறேன். 9நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் செல்வந்தராக இருந்தும், நீங்கள் அவருடைய ஏழ்மையினாலே செல்வந்தர்களாவதற்கு, உங்களுக்காக ஏழையானாரே. 10இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மட்டுமில்லை, செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டு கடந்த வருடத்தில் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாக இருக்கும். 11எனவே, அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பம் உண்டாயிருந்ததுபோல, உங்களிடம் இருக்கிறவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக. 12ஒருவனுக்கு மனவிருப்பம் இருந்தால், அவனுக்கு இல்லாதவைகளின்படியல்ல, அவனுக்கு இருக்கிறவைகளின்படியே அங்கீகரிக்கப்படும். 13மற்றவர்களுக்கு உதவியும், உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, ஏற்றத்தாழ்வில்லாமல் இருக்கும்படியாகவே சொல்லுகிறேன். 14எப்படியென்றால், அதிகமாகச் சேர்த்தவனுக்கு அதிகமானதும் இல்லை, கொஞ்சமாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை என்று எழுதியிருக்கிறபடி, 15ஏற்றத்தாழ்வற்றப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்களுடைய வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.
தீத்துவின் ஒப்படைப்பு
16அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட வாஞ்சை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம். 17நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கீகரித்ததோடு, அவன் அதிக வாஞ்சையாக இருந்து, தன் மனவிருப்பத்தின்படியே உங்களிடம் வருவதற்காகப் புறப்பட்டான். 18நற்செய்தி ஊழியத்தில் எல்லா சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடுகூட அனுப்பியிருக்கிறோம். 19அதுமட்டும் இல்லை, கர்த்தருக்கு மகிமை உண்டாகவும், உங்களுடைய மனவிருப்பம் விளங்கவும், எங்களுடைய ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் கொண்டுபோகும்போது, எங்களுடைய பயணத்தில் துணையாக இருப்பதற்காக, அவன் சபைகளால் தெரிந்து நியமிக்கப்பட்டவனாகவும் இருக்கிறான். 20எங்களுடைய ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த அதிகமான தர்மப்பணத்தைக்குறித்து யாரும் எங்களைக் குற்றப்படுத்தாதபடி நாங்கள் எச்சரிக்கையாக இருந்து, 21கர்த்தருக்கு முன்பாகமட்டும் இல்லை, மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய விரும்புகிறோம். 22மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவன் என்று நாங்கள் பலமுறை பார்த்து அறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேல் உள்ள அதிக நம்பிக்கையினாலே அதிக எச்சரிக்கையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடு அனுப்பியிருக்கிறோம். 23தீத்துவைக்குறித்து யாராவது விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும், உங்களுக்காக என் உடன்வேலையாளுமாக இருக்கிறான் என்றும்; எங்களுடைய சகோதரர்களைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளில் இருந்து அனுப்பப்பட்ட பிரதிநிதிகளும், கிறிஸ்துவிற்கு மகிமையுமாக இருக்கிறார்கள் என்றும் அறியவேண்டும். 24எனவே, உங்களுடைய அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

Currently Selected:

2 கொரி 8: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in