1 சாமு 9:2-17
1 சாமு 9:2-17 IRVTAM
அவனுக்குச் சவுல் என்னும் பெயருள்ள மிகவும் அழகான வாலிபனான ஒரு மகன் இருந்தான்; இஸ்ரவேல் மக்களில் அவனை விட அழகுள்ளவன் இல்லை; எல்லா மக்களும் அவனுடைய தோளிற்கு கீழ் இருந்தனர். இவன் அவர்களை விட உயரமுள்ளவனாயிருந்தான். சவுலின் தகப்பனான கீசுடைய கழுதைகள் காணாமல்போனது; ஆகையால் கீஸ் தன் மகனான சவுலைப் பார்த்து: நீ வேலைக்காரர்களில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான். அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக் கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை; பென்யமீன் நாட்டைக் கடந்தும் அவைகளைக் காணவில்லை. அவர்கள் சூப் என்னும் நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னோடிருந்த வேலைக்காரனை நோக்கி: என் தகப்பன், கழுதைகளின் மேலுள்ள கவலையை விட்டு, நமக்காகக் கவலைப்படாதபடித் திரும்பிப்போவோம் வா என்றான். அதற்கு அவன்: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனிதன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒரு வேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான். அப்பொழுது சவுல் தன்னுடைய வேலைக்காரனைப் பார்த்து: நாம் போனாலும் அந்த மனிதனுக்கு என்ன கொண்டுபோவோம்; நம்முடைய பைகளில் இருந்த தின்பண்டங்கள் செலவழிந்து போனது; தேவனுடைய மனிதனாகிய அவருக்குக் கொண்டு போவதற்குரிய காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்றான். அந்த வேலைக்காரன் மறுபடியும் சவுலைப் பார்த்து: இதோ, என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனிதன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படி, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான். முற்காலத்தில் இஸ்ரவேலில் தேவனிடத்தில் விசாரிக்கப்போகிற எவனும் ஞானதிருஷ்டிக்காரனிடம் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்த நாளிலே தீர்க்கதரிசி எனப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான். அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து: நல்ல காரியம் சொன்னாய், போவோம் வா என்றான்; அப்படியே தேவனுடைய மனிதன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள். அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாக ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள். அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; சீக்கிரமாகப் போங்கள்; இன்றைக்கு மக்கள் மேடையில் பலியிடுகிறதினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார். நீங்கள் பட்டணத்திற்குள் நுழைந்தவுடனே, அவர் மேடையின்மேல் சாப்பிடப் போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள்; அவர் வரும்வரை மக்கள் சாப்பிடமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார்; பின்பு அழைக்கப்பட்டவர்கள் சாப்பிடுவார்கள்; உடனே போங்கள்; இந்த நேரத்திலே அவரைக் காணலாம் என்றார்கள். அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல் மேடையின்மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டு வந்தான். சவுல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னே யெகோவா சாமுவேலின் காது கேட்கும்படி: நாளை இதே நேரத்தில் பென்யமீன் நாட்டானான ஒரு மனிதனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என்னுடைய மக்களான இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம் செய்வாய்; அவன் என்னுடைய மக்களை பெலிஸ்தர்களின் கையிலிருந்து மீட்பான்; என்னுடைய மக்களின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினதால், நான் அவர்களை ஏக்கத்தோடு பார்த்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார். சாமுவேல் சவுலைக் கண்டபோது, யெகோவா அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனிதன் இவனே; இவன்தான் என்னுடைய மக்களை ஆளுவான் என்றார்.





