YouVersion Logo
Search Icon

1 சாமு 18

18
அத்தியாயம் 18
தாவீதும் யோனத்தானும் நண்பர்களாகிறார்கள்
1அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடு ஒன்றாக இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போல நேசித்தான். 2சவுல் அவனை அவனுடைய தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக விடாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான். 3யோனத்தான் தாவீதைத் தன்னுடைய ஆத்துமாவைப்போல நேசித்ததால், அவனும் இவனும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள். 4யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் உடைகளையும், தன் பட்டயத்தையும், தன்னுடைய வில்லையும், தன்னுடைய கச்சையையும் கூடத் தாவீதுக்குக் கொடுத்தான்.
தாவீதின் வெற்றிகளை சவுல் கவனித்தல்
5தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடத்தியதால், சவுல் அவனை யுத்தமனிதர்களின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா மக்களின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரர்களின் கண்களுக்கும் பிரியமாயிருந்தான். 6தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, மக்கள் திரும்ப வரும்போதும், பெண்கள் இஸ்ரவேலின் எல்லா பட்டணங்களிலும் இருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். 7அந்த பெண்கள் ஆடிப்பாடும்போது:
“சவுல் கொன்றது 1,000, தாவீது கொன்றது 10,000” என்று பாடினார்கள். 8அந்த வார்த்தை சவுலுக்கு ஆழ்ந்த துக்கமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் 10,000, எனக்கோ 1,000 கொடுத்தார்கள்; இன்னும் ஆட்சி மட்டும் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, 9அந்த நாள் முதற்கொண்டு சவுல் தாவீதை சந்தேகத்தோடு பார்த்தான்.
தாவீதைக் கண்டு சவுல் பயப்படுதல்
10மறுநாளிலே தேவனால் விடப்பட்ட தீயஆவி சவுலின்மேல் இறங்கினது; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன்னுடைய கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது. 11அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு முறை அவனுக்குத் தப்பினான். 12யெகோவா தாவீதோடு இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து, 13அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம் பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான். 14தாவீது தன்னுடைய செயல்களில் எல்லாம் புத்திமானாக நடந்தான்; யெகோவா அவனோடு இருந்தார். 15அவன் மகா புத்திமானாக நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்தான். 16இஸ்ரவேலர்களும் யூதா மக்களுமாகிய யாவரும் தாவீதை நேசித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான். 17என்னுடைய கை அல்ல, பெலிஸ்தர்களின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என்னுடைய மூத்த மகளாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல தைரியமுள்ளவனாக மாத்திரம் இருந்து, யெகோவாவுடைய யுத்தங்களை நடத்து என்றான். 18அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து: ராஜாவுக்கு மருமகனாவதற்கு நான் எம்மாத்திரம், என்னுடைய ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என்னுடைய தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான். 19சவுலின் மகளாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படும் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள். 20சவுலின் மகளாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது. 21அவள் அவனுக்கு இடையூராக இருக்கவும், பெலிஸ்தர்களின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் நினைத்து, தாவீதை பார்த்து: நீ என்னுடைய இரண்டாம் மகளால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான். 22பின்பு சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: நீங்கள் தாவீதோடு இரகசியமாகப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் உம்மை நேசிக்கிறார்கள்; இப்போதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான். 23சவுலின் ஊழியக்காரர்கள் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாக இருக்கிறேன் என்றான். 24தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். 25அப்பொழுது சவுல்: ராஜா சீதனத்தை விரும்பாமல், பெலிஸ்தர்களின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் எதிரிகளிடத்தில் பழிவாங்க விருப்பமாக இருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தர்களின் கையினால் விழச்செய்வதே சவுலுடைய எண்ணமாக இருந்தது. 26அவன் ஊழியக்காரர்கள் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது. 27அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறும் முன்பே, தாவீது எழுந்து, தன்னுடைய மனிதர்களை கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தர்களில் இருநூறுபேரை வெட்டி, அவர்களின் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, தான் ராஜாவுக்கு மருமகனாகும்படி, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன்னுடைய மகளாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். 28யெகோவா தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்து கொண்டான்; சவுலின் மகளாகிய மீகாளும் அவனை நேசித்தாள்#18:28 இஸ்ரவேலர்கள் எல்லோரும் தாவீதை நேசித்தார்கள். . 29ஆகையால் சவுல் இன்னும் அதிகமாகத் தாவீதுக்குப் பயந்து, தான் உயிரோடிருந்த நாளெல்லாம் தாவீதுக்கு எதிரியாக இருந்தான். 30பெலிஸ்தர்களுடைய பிரபுக்கள் புறப்படும் போதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர்கள் எல்லோரையும் விட புத்திமானாக நடந்துகொண்டான்; அவனுடைய பெயர் மிகவும் புகழ்பெற்றது.

Currently Selected:

1 சாமு 18: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in