YouVersion Logo
Search Icon

1 நாளா 21

21
அத்தியாயம் 21
தாவீது வீரர்களைக் கணக்கெடுத்தல்
1சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி, இஸ்ரவேலைக் கணக்கெடுக்க தாவீதைத் தூண்டிவிட்டது. 2அப்படியே தாவீது யோவாபையும், படைத்தளபதிகளையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதுவங்கி தாண்வரை இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்களின் எண்ணிக்கையை நான் அறியும்படி என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான். 3அப்பொழுது யோவாப்: யெகோவாவுடைய மக்கள் இப்போது இருக்கிறதைவிட நூறு மடங்காக அவர் பெருகச்செய்வாராக; ஆனாலும் ராஜாவாகிய என்னுடைய ஆண்டவனே, அவர்கள் எல்லோரும் என்னுடைய ஆண்டவனுக்கு பணிவிடை செய்வதில்லையா? என்னுடைய ஆண்டவன் இதை ஏன் விசாரிக்கவேண்டும்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது எதற்காக நடக்கவேண்டும் என்றான். 4யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலோங்கியதால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமிற்கு வந்து, 5போர் வீரர்களைக் கணக்கெடுத்து, எண்ணிக்கையை தாவீதிடம் கொடுத்தான்; இஸ்ரவேலெங்கும் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் பதினொரு லட்சம்பேர்களும், யூதாவில் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் நான்குலட்சத்து எழுபதாயிரம்பேர்களும் இருந்தார்கள். 6ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாக இருந்ததால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய கணக்கெடுப்பிற்குள் வராதபடி எண்ணாமற்போனான். 7இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியால் அவர் இஸ்ரவேலைத் தண்டித்தார். 8தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; பெரிய முட்டாள்தனமாக செய்தேன் என்றான். 9அப்பொழுது யெகோவா, தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்துடனே பேசி, 10நீ தாவீதிடம் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார். 11அப்படியே காத் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: 12மூன்று வருடத்துப் பஞ்சமோ? அல்லது உன்னுடைய எதிரியின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன்னுடைய எதிரிகளுக்கு முன்பாக ஓடிப்போகச் செய்யும் மூன்றுமாதத் துரத்துதலோ? அல்லது மூன்றுநாட்கள் யெகோவாவுடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் அழிவு உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் யெகோவாவுடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று யெகோவா சொல்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன பதில் கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான். 13அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய பிரச்சனையில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் யெகோவாவுடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான். 14ஆகையால் யெகோவா இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரச்செய்தார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதாயிரம்பேர் இறந்தார்கள். 15எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினார்; ஆனாலும் அவன் அழிக்கும்போது யெகோவா பார்த்து, அந்தத் தீங்குக்கு மனவேதனையடைந்து, அழிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; யெகோவாவுடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திற்கு அருகில் நின்றான். 16தாவீது தன்னுடைய கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற யெகோவாவுடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன்னுடைய கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் சாக்கைப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள். 17தாவீது தேவனை நோக்கி: மக்களை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவம் செய்தேன்; தீங்கு நடக்கச்செய்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? என்னுடைய தேவனாகிய யெகோவாவே, தண்டிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய மக்களுக்கு விரோதமாக இராமல், எனக்கும் என்னுடைய தகப்பன் வீட்டிற்கும் விரோதமாக இருப்பதாக என்றான். 18அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று யெகோவாவுடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான். 19அப்படியே தாவீது யெகோவாவின் நாமத்திலே காத் சொன்ன வார்த்தையின்படி போனான். 20ஒர்னான் திரும்பிப் பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நான்கு மகன்களும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளிந்துகொண்டார்கள்; ஒர்னானோ போரடித்துக்கொண்டிருந்தான். 21தாவீது ஒர்னானிடம் வந்தபோது, ஒர்னான் கவனித்து தாவீதைப் பார்த்து, அவனுடைய களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைவரை குனிந்து தாவீதை வணங்கினான். 22அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி அதை எனக்குக் கொடு; வாதை மக்களைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதை உரிய விலைக்குக் கொடு என்றான். 23ஒர்னான் தாவீதை நோக்கி: ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் அதை வாங்கிக் கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்வாராக; இதோ, சர்வாங்க தகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், உணவுபலிக்குக் கோதுமையும் ஆகிய யாவையும் கொடுக்கிறேன் என்றான். 24அதற்கு தாவீது ராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாக வாங்கி, யெகோவாவுக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை உரிய விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி, 25தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் எடையுள்ள பொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து, 26அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறுஉத்திரவு கொடுத்ததுமல்லாமல், 27தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று யெகோவா அவனுக்குச் சொன்னார்.
28எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே யெகோவா தனக்கு பதில் சொன்னதை தாவீது அந்த காலத்திலே கண்டு அங்கேயே பலியிட்டான். 29மோசே வனாந்திரத்தில் உண்டாக்கின யெகோவா தங்குமிடமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது. 30தாவீது யெகோவாவுடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கமுடியாமலிருந்தது.

Currently Selected:

1 நாளா 21: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy