கீலேயாத்தின் ஆட்கள் யோர்தான் நதியை ஜனங்கள் கடக்கின்ற எல்லா பகுதிகளையும் கைப்பற்றினார்கள். அப்பகுதிகள் எப்பிராயீம் நாட்டிற்குச் செல்லும் வழியில் இருந்தன. எப்பிராயீமிலிருந்து ஓடிப்போனவன் நதிக்கு வந்து, “என்னை நதியைக் கடக்க விடுங்கள்” என்று சொன்னால் கீலேயாத்தின் மனிதர்கள், “நீ எப்பிராயீமைச் சேர்ந்தவனா?” என்று கேட்பார்கள். அவன் “இல்லை” என்று சொன்னால், அவர்கள், “‘ஷிபோலேத்’ என்று சொல்லு” என்பார்கள். எப்பிராயீம் மனிதரால் அந்த வார்த்தையைச் சரியாக உச்சரிக்க முடியாமல் அவர்கள் அதை, “சிபோலேத்” என்றனர். ஒருவன் “சிபோலேத்” என்று கூறினால் அவன் எப்பிராயீமைச் சேர்ந்தவன் என்று கண்டு, கீலேயாத் மனிதர்கள் நதியைக் கடக்கும் இடத்தில் அவனைக் கொன்றுவிடுவார்கள். எப்பிராயீம் ஆட்களில் 42,000 பேரை இவ்வாறு கொன்றார்கள்.